பகுதி 9
யெகோவாவை குடும்பமாக வழிபடுங்கள்
“வானத்தையும் பூமியையும் . . . படைத்தவரை வணங்குங்கள்.”—வெளிப்படுத்துதல் 14:7
இந்தச் சிற்றேட்டை வாசிக்கும்போது, நீங்களும் உங்கள் குடும்பமும் சந்தோஷமாக இருப்பதற்கு பைபிளில் பல அருமையான ஆலோசனைகள் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றே யெகோவா ஆசைப்படுகிறார். யெகோவாவைச் சேவிப்பதை நீங்கள் முக்கியமாக நினைக்கும்போது, ‘உங்களது மற்ற தேவைகளையும் நிறைவேற்றுவதாக’ அவர் வாக்கு கொடுத்திருக்கிறார். (மத்தேயு 6:33, ERV) நீங்கள் அவருடைய நண்பராக இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்! அதனால், அவரோடு நல்ல நட்பை வளர்த்துக்கொள்ள எப்போதும் முயற்சி செய்யுங்கள்.—மத்தேயு 22:37, 38.
1 யெகோவாவோடு உள்ள பந்தத்தைப் பலப்படுத்துங்கள்
பைபிள் என்ன சொல்கிறது? “‘நான் உங்களுக்குத் தகப்பனாக இருப்பேன், நீங்கள் எனக்கு மகன்களாகவும் மகள்களாகவும் இருப்பீர்கள்’ என்று . . . யெகோவா சொல்கிறார்.” (2 கொரிந்தியர் 6:18) நீங்கள் கடவுளுடைய நெருங்கிய நண்பராக இருக்க வேண்டுமென அவரே விரும்புகிறார். அதற்கு, நீங்கள் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும். “இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்” என்று யெகோவா உங்களை அன்புடன் கேட்கிறார். (1 தெசலோனிக்கேயர் 5:17) உங்கள் அடிமனதின் யோசனைகளையும் தாங்க முடியாத கஷ்டங்களையும் யெகோவாவிடம் சொல்லுங்கள்; அவற்றைக் கேட்க அவர் தயாராக இருக்கிறார். (பிலிப்பியர் 4:6) குடும்பமாக ஜெபம் செய்யும்போது, கடவுளோடு நீங்கள் எந்தளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தாரால் பார்க்க முடியும்.
நீங்கள் கடவுளிடம் பேசினால் மட்டும் போதாது, அவர் பேசுவதைக் கேட்பதும் முக்கியம். இதற்கு, பைபிளையும் பைபிள் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் படியுங்கள். (சங்கீதம் 1:1, 2) படித்த விஷயங்களை ஆழமாக யோசியுங்கள். (சங்கீதம் 77:11, 12) கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். அப்போது, கடவுள் பேசுவதை உங்களால் கேட்க முடியும்.—சங்கீதம் 122:1-4.
யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதும் அவரோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்த உங்களுக்கு உதவும். இதை எந்தளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அந்தளவு அதிகமாக அவரிடம் நெருங்கிச் செல்வீர்கள்.—மத்தேயு 28:19, 20.
நீங்கள் என்ன செய்யலாம்?
-
பைபிள் படிப்பதற்கும் ஜெபம் செய்வதற்கும் ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குங்கள்
-
பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் தருவதைவிட, குடும்பமாக ஆன்மீக விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
2 குடும்ப வழிபாட்டை மகிழ்ந்து அனுபவியுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது? “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக்கோபு 4:8) குடும்ப வழிபாட்டை* முன்னதாகவே திட்டமிடுங்கள், அதைத் தவறாமல் செய்யுங்கள். (ஆதியாகமம் 18:19) உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடவுளுக்கென்று நேரம் ஒதுக்குங்கள். ‘வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும்’ கடவுளைப் பற்றி உங்கள் குடும்பத்தாரிடம் பேசுங்கள். (உபாகமம் 6:6, 7) அது, கடவுளோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்த அவர்களுக்கு உதவும். ‘நானும் என் வீட்டாரும், கர்த்தரையே சேவிப்போம்’ என்று பைபிள் காலங்களில் வாழ்ந்த யோசுவா சொன்னார். அவரைப்போலவே நீங்களும் யெகோவாவைக் குடும்பமாகச் சேவியுங்கள்.—யோசுவா 24:15.
நீங்கள் என்ன செய்யலாம்?
-
குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருடைய தேவைகளையும் மனதில் வைத்து, குடும்ப வழிபாட்டைத் திட்டமிடுங்கள், அதைத் தவறாமல் செய்யுங்கள்