Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்

உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்

உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்

ஆப்பிரிக்கா

நாடுகள் 57

மக்கள்தொகை 87,80,00,158

பிரஸ்தாபிகள் 11,71,674

பைபிள் படிப்புகள் 23,82,709

பெனின்

சகோதரர் க்ளாடும் அவருடைய மனைவி மாரீக்ளரும் 27 வருடங்களாக மிஷனரி சேவையை உற்சாகமாய்ச் செய்து வந்திருக்கிறார்கள். பிப்ரவரி மாதத்தில் மாரீக்ளர் சறுக்கி விழுந்ததால் அவருடைய பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, க்ளாட் மிஷனரி இல்லத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, கீழே விழுந்துவிட்டார்; அவருடைய பாதத்திலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இரண்டு பேருக்குமே காலில் மாவுக்கட்டு போடப்பட்டது. “நாங்கள் எல்லாவற்றிலும் ஜோடி சேர்ந்து கொள்வோம்!” என க்ளாட் தமாஷாகச் சொன்னார்.

க்ளாடுக்குக் கட்டுப் போடப்பட்டிருந்தாலும் அவரால் ஓரளவு நடக்க முடிந்தது; ஆனால், மாரீக்ளர் சில வாரங்களுக்கு எங்கும் செல்லாமல் முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று. தன்னுடைய 12 பைபிள் படிப்புகளில் 4-ஐ மிஷனரி இல்லத்திலேயே நடத்த ஏற்பாடு செய்தார்; என்றாலும், ஊழியத்தின் மற்ற அம்சங்களில் அவரால் ஈடுபட முடியாமல் போனது. அதனால், மிஷனரி இல்லத்திற்கு முன் ஒரு மேஜை நிறையப் பிரசுரங்களைப் பரப்பி வைத்து உட்கார்ந்துகொண்டு, வருவோர் போவோரிடம் பேசத் தீர்மானித்தார். இவ்வாறு, மார்ச் மாதத்தில் 83 மணிநேரத்தை அவர் ஊழியத்தில் செலவிட்டார். அவருடைய முயற்சியை யெகோவா ஆசீர்வதித்தாரா? அந்த மாதத்தில், அவர் 14 புத்தகங்களையும் 452 சிற்றேடுகளையும் 290 பத்திரிகைகளையும் 500-க்கும் அதிகமான துண்டுப்பிரதிகளையும் அளித்தார்.

எத்தியோப்பியா

தொலைதூர கிராமத்தில் வசித்து வருகிற ஆரகா என்பவர் தன்னுடைய வீட்டில் வால்பேப்பரை ஒட்ட நினைத்தார். அவருடைய ஊர்க்காரர்கள் சிலர் அதற்குச் செய்தித்தாள்களைப் பயன்படுத்தியபோதிலும், அவர் வண்ணக் காகிதங்களை ஒட்ட விரும்பினார். அவர் சந்தைக்குச் சென்றிருந்தபோது பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிற்றேட்டை ஒருவர் யாரிடமோ கொடுப்பதைப் பார்த்தார். அவர் தனக்கும் ஒரு பிரதியைக் கேட்டு வாங்கிக்கொண்டார். வீட்டிற்கு வந்ததும் அதை வாசிக்காமலேயே தனித்தனி தாள்களாகப் பிரித்துச் சுவர்களில் ஒட்டினார். “இயேசு கடவுளுடைய குமாரனாக இருந்தார்” என்று அந்த “வால்பேப்பரில்” குறிப்பிட்டிருந்ததை இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் கவனித்தார். அவருக்குக் கற்பிக்கப்பட்டிருந்த புரியாப் புதிரான திரித்துவக் கோட்பாட்டிலிருந்து இது வித்தியாசப்பட்டிருந்தது. அவருக்கு ஆர்வம் ஏற்பட்டதால், கடவுளுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்று சொல்கிற ஆட்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒன்பது மணிநேரம் நடந்து பக்கத்து ஊருக்குச் சென்றார். அங்கு யாரையும் கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். பிறகு, மீண்டும் ஒருமுறை அங்கு சென்றார்; இந்த முறை அங்குள்ள ஆட்கள் ஒரு சகோதரரின் வீட்டைக் காட்டினார்கள். முதன்முதலில் அந்தச் சிற்றேட்டை அவருக்குக் கொடுத்தவரின் வீடுதான் அது. என்றாலும், தீர்மானத்தோடு வந்த அவருக்கு இன்னொரு சோதனை ஏற்பட்டது; அந்தச் சகோதரர் வீட்டில் இல்லாததால் பல மணிநேரம் அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. பின்பு, அந்தச் சகோதரரோடு பேசியது ஒரு பைபிள் படிப்புக்கு வழிநடத்தியது. அதன் பிறகு, பல மாதங்களுக்கு அவர் அந்த ஊருக்கு அடிக்கடி சென்று கடவுளைப் பற்றிக் கற்று வந்தார். கற்றுக்கொண்ட விஷயங்களை அவருடைய கிராமத்து மக்களிடம் சொன்னபோது அதிக எதிர்ப்பு வந்தது, நிறையப் பேர் அவரைக் கண்டு ஒதுங்கினார்கள். என்றாலும், மக்களிடம் பேசுவதை அவர் நிறுத்திவிடவில்லை; அதனால் சிலர் ஆர்வம் காட்டினார்கள். அவ்வாறு ஆர்வம் காட்டியவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்தபோது, இரண்டு விசேஷ பயனியர்கள் அந்தக் கிராமத்துக்கு அனுப்பப்பட்டார்கள். சீக்கிரத்திலேயே, அவர்கள் 40-க்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தார்கள்; கிட்டத்தட்ட 40 பேர் கூட்டங்களில் கலந்துகொண்டார்கள். இப்போது, எட்டுப் பிரஸ்தாபிகள் அங்கு ஊழியம் செய்து வருகிறார்கள்; இந்தப் புதிய சகோதரருக்கோ சுவரிலுள்ள வண்ணப் படங்கள் வெறுமனே அலங்காரமாக இல்லாமல் மிகவும் அர்த்தமுள்ளதாய் ஆகிவிட்டன.

கானா

ஆப்பிரிக்கா எங்கும் செல் ஃபோன்களின் உபயோகம் கிடுகிடுவென அதிகரித்திருப்பதால், “பேச்சுத்தொடர்பு புரட்சி” நடப்பதாக மக்கள் சொல்கிறார்கள். வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக, அநேக கம்பெனிகள் இரவில் குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்குக் கட்டணமின்றி ஃபோன் பேச அனுமதி அளிக்கின்றன. கிரேஸ் என்ற சகோதரி இந்த ஏற்பாட்டை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அவருடைய பைபிள் மாணாக்கராக இருந்த மானிக்கா எப்போதும் பல வேலைகளில் மூழ்கியிருந்ததால் அவருக்கு பைபிள் படிப்பு நடத்துவது கஷ்டமாக இருந்தது. படிப்பைத் தொடருவதற்கு கிரேஸ் தன்னாலான எல்லாவற்றையும் செய்தார்; மானிக்காவின் வீட்டிற்குக் காலையில் ஐந்து மணிக்குச் செல்லவும்கூட ஏற்பாடு செய்தார். ஆனால், மானிக்காவுக்கு வேறு வேலைகள் வந்ததால் அந்த நேரமும்கூட அவருக்கு ஒத்துவரவில்லை. அப்போது, இரவில் கட்டணமின்றி ஃபோன் பேசும் ஏற்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ள கிரேஸ் தீர்மானித்தார். மானிக்காவும் அதற்கு ஒத்துக்கொண்டதால், காலையில் நான்கு மணிக்கு ஃபோனில் பைபிள் படிக்க அவர்கள் திட்டமிட்டார்கள். ஆனால் வருத்தகரமாக, அந்த நேரத்தில் நிறையப் பேர் ஃபோனைப் பயன்படுத்தியதால் லைன் கிடைப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அதனால், இன்னும் சீக்கிரமாக எழுந்து காலை மூன்று மணிக்கு பைபிளைப் படிக்கத் திட்டமிட்டார்கள்; வேலை பார்க்கிற அம்மாக்களான இந்த இரண்டு பேருக்கும் அது சவாலாக இருந்தபோதிலும் அவ்வாறு திட்டமிட்டார்கள். கிரேஸ் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய மாணாக்கரின் ஆர்வம் குறைந்துவிடாதிருக்க நான் ஆர்வத்தோடு படிப்பைத் தொடர்ந்து நடத்த வேண்டியிருந்தது; அதற்காக, பலத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். என்னுடைய ஃபோனில் அலாரம் வைத்து, எப்படியோ கஷ்டப்பட்டு அந்த நேரத்தில் எழுந்து கொண்டேன். நான் ரொம்பவே களைப்பாக உணர்ந்தபோதிலும், என்னுடைய தீர்மானத்தில் உறுதியாக இருந்தேன்.” 2008-ல் நடந்த “கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுதல்” என்ற மாவட்ட மாநாட்டில் மானிக்கா ஞானஸ்நானம் பெற்றதைப் பார்த்தபோது, தனக்குக் கைமேல் பலன் கிடைத்ததற்காக கிரேஸ் எவ்வளவாய்ப் பூரித்துப்போனார்! சமீபத்தில், இன்னொரு பெண்ணுக்கு பைபிள் படிப்பை நடத்த, கட்டணமின்றி ஃபோன் பேசும் இதே ஏற்பாட்டை கிரேஸ் பயன்படுத்தியிருக்கிறார்; அந்தப் பெண் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்.

மொசம்பிக்

ஆகஸ்ட் 2008-ல், வேகமாகப் போய்க்கொண்டிருந்த வண்டியிலிருந்து ஒரு ‘கோட்’ கீழே விழுந்தது; விதவையாய் இருந்த ஒரு ஏழை சகோதரியின் மண் குடிசைக்கு அருகில்தான் அது விழுந்தது. அந்தச் சகோதரி அதை எடுத்துப் பார்த்தபோது, அதன் பாக்கெட்டுகளில் ஆவணங்களும் விலையுயர்ந்த ஆபரணங்கள் உடைய மூன்று சிறிய பைகளும் சுமார் ஆயிரம் டாலர் பணமும் இருந்தன. அந்த ஆவணங்களில் இருந்த ஃபோன் நம்பர்களுக்குத் தொடர்புகொண்டு இப்படியொரு ‘கோட்’ கிடைத்திருப்பதைப் பற்றிச் சொல்லும்படி, பார்த்த ஆட்களிடம் எல்லாம் அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அன்று சாயங்காலம், காரில் நான்கு பேர் அந்தக் கிராமத்திற்கு வந்தார்கள். கிராம அதிகாரிகளின் முன்னிலையில் அச்சகோதரி அந்த ‘கோட்டை’ அதிலிருந்த எல்லாவற்றோடும்கூட அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். ‘இது மட்டும் யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒருவரிடம் கிடைத்திருந்தால் நிச்சயம் என் கைக்கு வந்து சேர்ந்திருக்காது’ என்று சொல்லி அவர் அழ ஆரம்பித்துவிட்டார். அந்த ஏழை சகோதரி தன்னுடைய ஊர் மக்களுக்குக் கொடுத்த சாட்சி, அவருடைய கடவுளாகிய யெகோவாவுக்குப் பெரும் புகழைச் சேர்த்தது.

அமெரிக்க நாடுகள்

நாடுகள் 55

மக்கள்தொகை 91,07,61,124

பிரஸ்தாபிகள் 35,75,123

பைபிள் படிப்புகள் 37,78,321

பார்படோஸ்

பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்ய பிள்ளைகளுக்குக் கற்றுத்தருவது பயனுள்ளதாக இருப்பதை அநேக பெற்றோர் காண்கிறார்கள். கிரெனெடா தீவிலுள்ள ஒரு தம்பதியர், யெகோவாதான் உன்னதமானவர் என்ற உண்மையைத் தங்களுடைய ஆறு வயது மகன் ஒரு பைபிள் வசனத்தைப் பயன்படுத்தி விளக்கியதை அறிந்தபோது சந்தோஷப்பட்டார்கள். அவனுடைய அப்பா இவ்வாறு எழுதுகிறார்: “ஒருநாள் மதியம் எங்கள் மகன் ஸ்டீஃபனை அழைத்துவர என் மனைவி லாரா அவனுடைய பள்ளிக்குச் சென்றிருந்தபோது அவனுடைய டீச்சர் அவளைக் கூப்பிட்டு, ‘உங்களுடைய மகனை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்திருக்கிறது. உங்களுடைய மத நம்பிக்கையில் எனக்கு ஈடுபாடு இல்லாவிட்டாலும், அவன் அதை எடுத்துச் சொன்ன விதத்தைக் கேட்டு மயங்கிவிட்டேன்’ என்று சொன்னார்.

“வீட்டிற்கு வந்ததும், டீச்சர் அப்படி மெச்சிப் பேசுமளவுக்கு என்ன நடந்ததென ஸ்டீஃபனிடம் என் மனைவி ஆர்வமாகக் கேட்டாள். காலையில் முதல் வகுப்பின்போது ‘இயேசுதான் கடவுள்’ என்று டீச்சர் சொன்னதாக அவன் கூறினான்.

“அப்போது ஸ்டீஃபன் கைதூக்கி, ‘இல்லை மிஸ். இயேசு, கடவுள் கிடையாது. யெகோவாவுடைய மகன்தான் இயேசு என்று பைபிள் சொல்கிறது; அதனால், அவர் யெகோவாவாக இருக்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறான்.

“அதற்கு, ‘இயேசுவும் யெகோவாவும் ஒன்றுதான் என நான் நம்புகிறேன்’ என்றாராம் அந்த டீச்சர்.

“‘ஆனால், யெகோவா மட்டுமே உன்னதமானவர் என்று பைபிள் சொல்கிறதே. அதனால் இயேசு அல்ல, யெகோவா மட்டும்தான் உன்னதமானவர்’ என ஸ்டீஃபன் சொல்லியிருக்கிறான். அவன் சங்கீதம் 83:17-ஐ மேற்கோள்காட்டி அதைச் சொல்லியிருக்கிறான்; அந்த வசனத்தை மனப்பாடம் செய்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் நாங்கள் முன்பு அவனுக்கு உதவியிருந்தோம். அந்த டீச்சர், ரொம்ப சீரியஸானவர்; என்றாலும், பைபிள் விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருந்த ஆறு வயது பையனுக்கு அவர் நிகராக முடியவில்லை.”

ஈக்வடார்

அநேக சகோதரர்கள், நாட்டுப்புறத்திலுள்ள கச்வா மொழி பிராந்தியத்தில் ஊழியம் செய்த பிறகு வீடு திரும்புவதற்கு பஸ் ஏறினார்கள். அந்த பஸ்ஸில் வீடியோ பார்க்கும் வசதி இருந்ததாலும், அதிலிருந்த அத்தனை பயணிகளும் கச்வா மொழி பேசுகிறவர்களாக இருந்ததாலும், அம்மொழியிலுள்ள நோவா-தாவீது வீடியோவைப் போட்டுக் காட்ட அவர்கள் அனுமதி பெற்றார்கள். தங்களுடைய தாய்மொழியிலேயே ஒரு வீடியோவைப் பார்த்தது அவர்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்தது! அவர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதனால், ஒரு பயணி ஏறுவதற்காக பஸ் நின்றபோது அவரைச் சீக்கிரமாக உட்காரும்படி அவர்கள் அவசரப்படுத்தினார்கள்; எதையும் விட்டுவிடாமல் பார்ப்பதற்காக அப்படிச் செய்தார்கள். வீடியோ முடிந்ததும் நிறையப் பேர் அந்த வீடியோ தங்களுக்கும் வேண்டுமெனக் கேட்டார்கள். சிலர் பைபிள் கேள்விகளைக் கேட்டதோடு, பிரசுரங்களும் வேண்டுமென சொன்னார்கள். இன்னும் சிலர், தங்களுடைய பெயரையும் நகரத்திலுள்ள தங்கள் வீட்டு விலாசத்தையும் கொடுத்து யாராவது வந்து தங்களைச் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். கச்வா மொழியில் நடக்கவிருந்த நினைவுநாள் அனுசரிப்புக்கான அழைப்பிதழை எல்லாரும் பெற்றுக்கொண்டார்கள். இதனால், அந்தத் தீவில் நடந்த நினைவுநாள் அனுசரிப்புக்கு நிறையப் பேர் திரண்டு வந்தார்கள்.

மெக்சிகோ

காபினோ என்ற பயனியர் சகோதரர், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒரு கதவைத் தட்டினார். எந்தப் பதிலும் வரவில்லை. மூன்று முறை தட்டியும் பதில் வரவில்லை. சற்றுப் பொறுத்து, நான்காவது முறை தட்டினார். கதவு திறந்தது; ஒருவர் தாங்க முடியாத மன வேதனையில் அழுதவாறு நின்றுகொண்டிருந்தார். அவர் காபினோவை உடனடியாக வீட்டிற்குள் அழைத்தார்; ஆனால், துக்கம் தொண்டையை அடைத்ததால் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. காபினோ, நற்செய்தியைப் பற்றி அவரிடம் ஆறுதலாகப் பேச ஆரம்பித்ததும் அவர் சற்றுத் தெளிவானார். “அங்கே இருக்கிற நாற்காலியைப் பார்த்தீர்களா?” என்று அவர் கேட்டார். “நீங்கள் மூன்றாவது முறை கதவைத் தட்டிய சமயத்தில் நான் அந்த நாற்காலிமீது நின்றுகொண்டிருந்தேன். அந்தக் கயிற்றைப் பார்த்தீர்களா? நீங்கள் நான்காவது முறை தட்டிய சமயத்தில் நான் கழுத்தில் சுருக்கு மாட்டியிருந்தேன். ஆனால், கதவைத் திறப்பதற்காக அதைக் கழற்றிவிட்டு வந்தேன். நீங்கள் விடாமல் கதவைத் தட்டியதற்கு நன்றி; நீங்கள் மட்டும் அப்படிச் செய்திருக்கவில்லை என்றால், நான் தூக்கில் தொங்கியிருப்பேன்” என்று அவர் சொன்னார். தன் மனைவி படுத்திய பாடுகளைத் தன்னால் தாங்க முடியவில்லை என அவர் கூறினார். அவருக்கு பைபிள் படிப்பு நடத்த காபினோ ஏற்பாடுகள் செய்தார். இந்த பயனியர் பொதுவாக, ஓரிரு முறை மட்டுமே கதவைத் தட்டுவார். ஆனால் இந்த முறை, அவர் விடாமல் தட்டியது ஒருவேளை தூதர்களின் வழிநடத்துதலாக இருந்திருக்கலாம்; அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

சிலி

ஒரு சகோதரி, கிறிஸ்துவின் மரண நினைவுநாள் அனுசரிப்புக்கு ஆர்வமுள்ளவர்களை அழைப்பதற்கான விசேஷ ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு சிறுமி அவரை அணுகி, “உங்களுடைய வயது என்ன?” என்று கேட்டாள். குழம்பிப்போன அந்தச் சகோதரி, “உன்னுடைய வயது என்ன?” என்று திருப்பிக் கேட்டார். அவள், தனக்கு ஆறு வயது என்பதாகவும், ஒரு யெகோவாவின் சாட்சியிடம் கொடுப்பதற்காக ஒரு கடிதத்தை அவளுடைய அம்மா தந்திருப்பதாகவும் சொன்னாள். ‘அந்த யெகோவாவின் சாட்சி சின்ன பிள்ளையாகவும் இருக்கக்கூடாது, வயதானவராகவும் இருக்கக்கூடாது’ என்று அவளுடைய அம்மா சொல்லியிருந்தார். அந்த விளக்கத்தைக் கேட்ட அச்சகோதரி தனக்கு 25 வயதென்று அவளிடம் சொன்னார். அவள் அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தாள். அதில் இப்படி எழுதியிருந்தது: “நீங்கள் என் வீட்டிற்கு வந்த சமயத்தில் கதவைத் திறந்து பேசுவதற்குக்கூட எனக்குத் தைரியம் வரவில்லை. நான் கடும் மனச்சோர்வில் தவிக்கிறேன்; உதவிக்காகக் கடவுளிடம் மன்றாடியிருக்கிறேன். நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கும் பைபிளை வாசிப்பதற்கும் முயற்சி செய்திருக்கிறேன்; ஆனால், அது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கிறது. நான் கணவனைப் பிரிந்து சோகத்தில் வாழ்கிறேன்; எனக்கு உதவ முடிந்த ஒருவரிடம் பைபிளைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். உங்களுக்கு முடியுமானால், தயவுசெய்து இன்று மதியம் என் வீட்டுக்கு வாருங்கள்; ஏனென்றால், காலையிலிருந்தே நான் படுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். நன்றி.”

அன்று மதியம் அந்தச் சகோதரி அவருடைய வீட்டிற்குச் சென்று, நினைவுநாள் அனுசரிப்புக்கும் விசேஷப் பேச்சுக்குமான அழைப்பிதழைக் கொடுத்தார்; அவை இரண்டுமே அந்தப் பெண்ணுக்கு உண்மையான ஆறுதலை அளித்தன. அப்போதிலிருந்து, அவர் கூட்டங்களுக்குத் தொடர்ந்து வருகிறார்; பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்திலிருந்து நடத்தப்படும் பைபிள் படிப்பிலும் நன்கு முன்னேற்றம் செய்து வருகிறார். அவருடைய ஆறு வயது மகள்? அவளுக்கும், அவளுடைய 12 வயது அக்காவுக்கும்கூட தனியாக பைபிள் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

பியூர்டோ ரிகோ

ஒரு சகோதரி இவ்வாறு எழுதுகிறார்: “நான் தெரு ஊழியத்தில் ஆட்களிடம் பத்திரிகைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தேன்; அப்போது, ஓர் இளம் பெண் தன்னுடைய கார் டயர்களுக்குக் காற்றடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவரிடம் சென்றேன். ஆனால், நான் பேச ஆரம்பிப்பதற்குள், அவரே என்னிடம் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைத் தரும்படி கேட்டார்; அந்தப் பத்திரிகைகளை வாசிக்க ரொம்பப் பிடிக்கும் என்றும் சொன்னார். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி நான் அவரிடம் சொன்னேன்; ஆனால், அவர் தன் அம்மாவுடைய வீட்டின் இரண்டாவது மாடியில் குடியிருப்பதாகவும் அம்மாவுக்குச் சாட்சிகளைக் கண்டாலே ஆகாது என்றும் கூறி பைபிள் படிப்புக்குச் சம்மதிக்கவில்லை. நான் அவருடைய விலாசத்தைக் கேட்டபோது தெருவின் பெயரை மட்டுமே சொன்னார். பின்பு ஒருநாள், நான் அந்தத் தெருவுக்குப் போய் அவருடைய வீட்டைத் தேடினேன்; ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு இன்னொரு நாள் அந்தத் தெருவுக்குப் போய் அக்கம்பக்கத்தாரிடம், ‘நான்ஸி என்பவருடைய வீடு எங்கிருக்கிறது? அவருக்கு இரண்டு சின்ன பிள்ளைகள் இருக்கிறார்களே’ என்று விசாரித்தேன். கடைசியாக, அவருடைய வீட்டைக் கண்டுபிடித்ததும் சந்தோஷமடைந்தேன். என்றாலும், வீட்டில் அவரைப் பார்க்கவே முடியவில்லை; அதனால், சில பத்திரிகைகளோடு சிறிய சீட்டுகளையும் வைத்துவிட்டு வருவேன். ஒருவழியாக அவரை நான் சந்தித்தபோது, அவர் அழ ஆரம்பித்துவிட்டார், ராஜ்ய மன்றத்திற்கு வர விரும்புவதாகச் சொன்னார். அவர் அங்கு வந்து, சகோதர சகோதரிகளின் அன்பு மழையில் நனைந்தார். நான் அவருடைய வீட்டில் விட்டுவந்த பத்திரிகைகளையும் சீட்டுகளையும் அவர் பார்க்கவே இல்லையாம்; ஏனென்றால், அவர் வீடு திரும்பும் முன்பே அவருடைய அம்மா அவற்றையெல்லாம் எடுத்துத் தூக்கிப்போட்டிருந்தாராம். அவருடைய அக்காவின் வீட்டில் நாங்கள் பைபிளைப் படிக்க ஆரம்பித்தோம்; சீக்கிரத்திலேயே அவர் கூட்டங்களுக்குத் தவறாமல் வர ஆரம்பித்தார். இப்போது, அவர் எந்தவொரு கூட்டத்தையும் தவறவிடுவதில்லை. அவர் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார். அவரும் அவருடைய சின்ன பிள்ளைகள் இருவரும் கூட்டங்களில் பதில் சொல்வதைக் கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது.

ஆசியாவும் மத்திய கிழக்கும்

நாடுகள் 47

மக்கள்தொகை 407,35,56,172

பிரஸ்தாபிகள் 6,35,896

பைபிள் படிப்புகள் 5,79,554

தென் கொரியா

ராஜ்ய மன்றத்திற்குப் பக்கத்தில் குடியிருக்கிற ஒருவர், தன்னுடைய வீட்டிற்குமுன் காரை நிறுத்தியிருந்தார்; அதில் யாரோ ஒருவர் சீட்டு எழுதி வைத்திருந்ததைப் பார்த்தார். அந்தச் சீட்டில், “நான் என்னுடைய காரை நிறுத்தும்போது தெரியாமல் உங்களுடைய காரை உரசிவிட்டேன். தயவுசெய்து எனக்கு ஃபோன் செய்யுங்கள், நான் அதைச் சரிசெய்து தருகிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது. அருகிலுள்ள ராஜ்ய மன்றத்திற்கு வந்துபோகிற யெகோவாவின் சாட்சிகளுடைய நடத்தையை அவர் கவனித்திருந்ததால், ‘இந்த நேர்மையான நபர் யெகோவாவின் சாட்சியாகத்தான் இருக்க வேண்டும்’ என மனதுக்குள் நினைத்தார்.

சூயன் என்ற சகோதரியே அந்தச் சீட்டை எழுதி வைத்திருந்தார்; காரின் சொந்தக்காரர் இந்தச் சகோதரிக்கு ஃபோன் செய்தபோது அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு காரைச் சரிசெய்து தருவதாக மறுபடியும் சொன்னார். அவரோ, “கொஞ்சம் பொறுங்கள், நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியா?” என்று கேட்டார். சகோதரி எவ்வளவு ஆச்சரியப்பட்டிருப்பார் என யோசித்துப் பாருங்கள்! அவர், தானே தன்னுடைய காரைச் சரிசெய்துகொள்வதாகவும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்பதாகவும் சொன்னார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிச் சில விஷயங்களை அவர் தெரிந்துகொள்ள விரும்பியதால், இந்தச் சகோதரியைச் சந்திக்க ஆசைப்படுவதாகவும் சொன்னார். சூயன் தன்னுடைய அப்பாவோடும் சபையிலுள்ள மற்றொரு சகோதரரோடும் அவரைச் சந்திக்கச் சென்றார். அவர், “நான் ராஜ்ய மன்றத்திற்குப் பக்கத்தில் குடியிருப்பதால் யெகோவாவின் சாட்சிகளுடைய நடத்தையைக் கவனிக்க முடிந்திருக்கிறது. நீங்கள் நல்ல ஆட்கள். ஆனால், ஏன் எல்லாரும் உங்களை ரொம்பவே வெறுக்கிறார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று சொன்னார். அவர் கேட்ட பல கேள்விகளுக்கு சூயனுடைய அப்பா, பைபிளிலிருந்தும் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்திலிருந்தும் பதிலளித்தார். இப்போது, சூயனுடைய அப்பாவிடம் அவர் தவறாமல் பைபிளைப் படித்து வருகிறார், நன்கு முன்னேறியும் வருகிறார்.

கட்டுப்பாடும் தடையுத்தரவும் உள்ள நாடுகளில் ஊழியம்

ஒரு ராணுவத் துணைத் தளபதி, யெகோவாவின் சாட்சியான தன்னுடைய மனைவியிடம் சத்தியம் ஏற்படுத்தியிருந்த நல்ல மாற்றத்தைக் கவனித்தார்; அது அவருடைய மனதைத் தொட்டது. அதனால், அவர் பைபிளைப் படிக்கச் சம்மதித்தார். அதை அவருடைய மேலதிகாரியான படைத் தளபதி அறிந்தபோது, அதைப் பற்றிப் பேச அவரை அழைத்தார். யெகோவாவின் சாட்சிகளோடுள்ள சகவாசத்தை நிறுத்தாவிட்டால், அவரைக் கண்காணாத இடத்திற்கு மாற்றிவிடுவதாகச் சொன்னார். அவரோ தன்னுடைய மனைவி ரொம்பக் காலமாகவே பைபிளைப் படித்து வந்திருந்தார் என்றும், அதனால் எந்தத் தீங்கும் வந்ததாகத் தனக்குத் தெரியவில்லை என்றும், ஆகவே பைபிள் படிப்பதை நிறுத்தப்போவதில்லை என்றும் தைரியமாக அந்தப் படைத் தளபதியிடம் சொன்னார். சில காலத்திற்குப் பிறகு, அவர் ராணுவத்தைவிட்டு விலகத் தீர்மானித்தார். இப்போது, அவர் ஞானஸ்நானம் பெற்று ஓர் ஒழுங்கான பயனியராகவும் உதவி ஊழியராகவும் சேவை செய்து வருகிறார். ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அந்தப் படைத் தளபதியின் மனைவியும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். அந்தப் படைத் தளபதியால் தன் மனைவியையும் தடுக்க முடியவில்லை; இப்போது அவருடைய மனைவியும்கூட ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிறார்.

மற்றொரு நாட்டில், ஒரு சகோதரி ஓர் இளம் பெண்ணுக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தார்; அந்தப் பெண்ணின் கணவர் அதைக் கடுமையாக எதிர்த்தார். வீட்டில் பைபிளைப் படிக்க முடியாததால், சகோதரியும் அந்தப் பெண்ணும் ஒரு சிறிய பூங்காவில் பைபிளைப் படிக்க ஏற்பாடு செய்துகொண்டார்கள். படிப்பின்போது, அந்தப் பூங்காவில் காலார நடந்துகொண்டிருந்த பெரியவர் ஒருவர் அவர்களையே சுற்றிச் சுற்றி வந்தார்; அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதையெல்லாம் கவனித்தார். ஒருநாள், அவர்களிடம் அவர் வந்து சில பைபிள் கேள்விகளைக் கேட்டார். அடுத்த பைபிள் படிப்பின்போதும் அவ்வாறே கேட்டார். அதனால், அந்தப் பெண் சற்று எரிச்சலடைந்து, “பைபிளைப் படிப்பதற்கு எனக்குக் கிடைப்பதே ஒரு மணிநேரம்தான், அதிலும் நீங்கள் வந்து ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டு அந்த நேரத்தையெல்லாம் எடுத்துக்கொள்கிறீர்களே” என்று சொன்னார். அதன் பிறகு, அச்சகோதரி அந்தப் பெரியவருக்கு பைபிள் படிப்பு நடத்த ஒரு சகோதரரை ஏற்பாடு செய்தார்; அவர் சீக்கிரத்திலேயே முன்னேற்றம் செய்து, கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் நேர்த்தியாக உடையணிந்து ஒரு பிரீஃப்கேஸை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்புவதைப் பக்கத்தில் குடியிருக்கிற இரண்டு பெண்கள் பார்த்தார்கள். அவர் எங்கே போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளத் துடித்தார்கள். அவர் ஏதோ ஒரு “புதிய மதத்தில்” சேர்ந்திருக்கிறார் என்று அவர்களுக்குத் தெரிய வந்தது. அதைக் கண்டுபிடிப்பதற்காக, அவர்கள் இருவரும் அவருக்குப் பின்னாலேயே சென்று, ராஜ்ய மன்றத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கிருந்த சகோதரிகள் நிறையப் பேர் அவர்களிடம் பேசினார்கள்; பைபிளைப் படித்துத் தெரிந்துகொள்ள விருப்பமா என்றும் கேட்டார்கள். ஒரு பெண் அதற்குச் சம்மதித்தாள். பூங்காவில் பைபிளைப் படித்த இளம் பெண், அந்தப் பெரியவர், அவர் பின்னாலேயே சென்ற பெண்களில் ஒருவர் என இவர்கள் மூன்று பேருமே நன்கு முன்னேற்றம் செய்து சமீபத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

கம்போடியா

இங்கு பயனியர் ஊழியம் செய்கிற லூயி என்ற சகோதரி, ஒரு கிராமத்திற்குத் தவறாமல் சைக்கிளில் செல்கிறார். அங்குள்ள வீடுகள் மூங்கில்களால் ஆனவை; அவை மரக்கம்பங்களின் மீது அமைக்கப்பட்டவை. அப்படிப்பட்ட வீடுகளில் அவர் பைபிள் படிப்புகளை நடத்துகிறார். நினைவுநாள் அனுசரிப்புக்கு மூன்று நாட்களுக்குமுன், அந்தக் கிராமத்தில் பைபிள் படித்துவரும் ஒரு பெண்ணிடம் அந்த நிகழ்ச்சியின் நோக்கத்தைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார். அப்போது, சில பிள்ளைகள் அவரைச் சூழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். பிள்ளைகளின் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனது. லூயி, நினைவுநாள் அனுசரிப்புக்கான 57 அழைப்பிதழ்களைக் கொடுத்தார். மறுநாள், மற்றொரு பைபிள் படிப்பை நடத்த அந்தக் கிராமத்திற்குச் சென்றார்; அந்த மாணாக்கர் தன்னுடைய உறவினர்களும் நண்பர்களும் நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். அதனால், அவர்களுக்காக இன்னும் 20 அழைப்பிதழ்களை அந்த மாணாக்கரிடம் கொடுத்தார். இத்தனை பேரும் நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொள்வதற்கு எப்படி உதவுவதென நினைத்து லூயி கவலைப்பட்டார். அவர் ஜெபம் செய்துவிட்டு, தன்னுடைய பைபிள் மாணாக்கர் ஒருவரின் அப்பாவிடம் அதைக் குறித்துப் பேசினார்; கிராமத் தலைவரான அவர், லூயிக்கு ஒரு வழி சொன்னார். பொதுவாக நான்கு பேர் உட்கார முடிந்ததும் மோட்டார் சைக்கிளோடு இணைக்கப்பட்டதுமான ஒரேவொரு டுக்டுக் வண்டிக்கு ஏற்பாடு செய்தால் எல்லாருமே அதில் போக முடியும் என்று அவர் சொன்னார்; ஏனெனில், அதில் நின்றுகொண்டோ ஒருவர் மடியில் ஒருவர் உட்கார்ந்துகொண்டோ செல்ல முடியும். அந்தக் கிராமத்திலிருந்து 18 பேர் நினைவுநாள் அனுசரிப்புக்கு வந்திருந்ததைப் பார்த்து லூயி மிகவும் சந்தோஷப்பட்டார்.

இந்தியா

ஆட்டோ ரிக்‍ஷா ஓட்டுபவரான ஒரு சகோதரர் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு பயணியிடம் சாட்சிகொடுத்தார். செய்தி நிருபரான அந்தப் பெண், அவருடைய தைரியத்தைப் பார்த்து வியந்துபோனார்; ஏனென்றால், அந்தப் பகுதியில் நற்செய்தியை அறிவித்த யெகோவாவின் சாட்சிகள் சிலர் தாக்கப்பட்டிருந்தார்கள். அந்தச் செய்தி நிருபர் நம் சகோதரருடன் பேசிய விஷயத்தை ஒரு தேசிய செய்தித்தாளில் வெளியிடத் தீர்மானித்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “அவருடைய வாயைக் கிளறிப் பார்க்கலாமென நினைத்தேன். அதனால், ‘நியூஸ்பேப்பரைப் பார்த்தீங்களா? உங்களுடைய ஆட்கள அடிச்சுட்டாங்களாமே, நிறைய இடங்கள்ல சர்ச்சுகளையும் உடைச்சுட்டாங்களாமே?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆமாம், பேப்பரில் படிச்சேன்’ என்றார். ‘இப்படியே நடந்திட்டிருந்தா நீங்க என்ன செய்வீங்க?’ என்று கேட்டேன். அவர் தலையசைத்தவாறு, ‘அதப் பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டோம். நாங்க நம்புறத நம்பிட்டுதான் இருப்போம்’ என்றார்.”

அந்த யெகோவாவின் சாட்சி கொடுத்திருந்த துண்டுப்பிரதியைப் பற்றி அவர் இவ்வாறு எழுதினார்: “வீட்டிற்குப் போனதும் அந்தத் துண்டுப் பிரசுரத்தை என் பையிலிருந்து எடுத்தேன். அதில் நம்பவே முடியாத, அழகான ஓர் இயற்கைக் காட்சியின் படம் இருந்தது. பசுமையான புல்வெளி, ஓர் ஏரி, பூத்துக்குலுங்கும் மரங்கள், தானியத்தையும் பழங்களையும் அறுவடை செய்யும் மக்கள், பனி போர்த்திய மலைகள் ஆகியவை அதில் சித்தரிக்கப்பட்டிருந்தன. ‘சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை’ என்பதே அதன் தலைப்பு. அதில் மத சம்பந்தப்பட்ட செய்தி இருந்தது. பொதுவாக, துணிக் கடையை அல்லது வாழ்க்கை முறையை விளம்பரப்படுத்தும் துண்டுப் பிரசுரத்தை யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், சமாதானமான புதிய உலகைப் பற்றி பேசினால் வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.”

பிலிப்பைன்ஸ்

ஜாம்போன்கா நகரின் ஒரு பகுதியில் ஒரு பெரிய மலை உள்ளது; 200 கிலோமீட்டர் தொலைவிலிருந்துகூட அதன் உச்சியைப் பார்க்க முடியும். “ஆர்வமுள்ள ஒரு நபர் அந்த மலையுச்சியில் குடியிருக்கிறார் என்றால் நாம் என்ன செய்வோம்?” என்று அந்த மலையின் சுற்றுவட்டாரத்தில் குடியிருக்கிற சகோதரரர்கள் ஊழியத்தின்போது அடிக்கடி கிண்டலாகச் சொல்லிக்கொள்வார்கள். ஒருநாள், அவர்கள் அந்த மலையடிவாரத்தில் ஊழியம் செய்யும்போது ஒருவர் வந்து, தான் யெகோவாவின் சாட்சிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். பைபிளைப் படிப்பதற்கு அவர்களுடைய உதவி வேண்டுமென அவர் சொன்னார். அவர் எங்கே குடியிருக்கிறார் என சகோதரர்கள் கேட்டார்கள். அவர் மலையுச்சியைச் சுட்டிக்காட்டியபோது, சகோதரர்கள் வாயடைத்துப் போனார்கள். அவருடைய வீடு மலையுச்சியில் இல்லையென்றும், மலைக்குப் பின்னால் இருக்கிறதென்றும், மலையுச்சியைக் கடந்துதான் அங்கு போக முடியுமென்றும் சொன்னார். ஆச்சரியம் தெளிந்ததும், சகோதரர்கள் அவருடைய வீட்டிற்குப் போக ஒத்துக்கொண்டார்கள். பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; அவருடைய வீடு வெகு தொலைவில் இருந்தாலும், அவர் இப்போது ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு வருகிறார். இப்போது அவர், ‘யெகோவாவின் ஆலயமுள்ள பர்வதத்திற்கு’ திரண்டு வருகிறவர்களில் ஒருவராக இருக்கிறார்.—ஏசாயா 2:2, திருத்திய மொழிபெயர்ப்பு.

ஐரோப்பா

நாடுகள் 47

மக்கள்தொகை 73,69,88,468

பிரஸ்தாபிகள் 15,63,910

பைபிள் படிப்புகள் 8,19,067

பின்லாந்து

இரண்டு சகோதரர்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது, உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து பைபிள் படிப்பு ஏற்பாட்டைக் குறித்துச் சொல்லி வந்தார்கள். ஒரு வீட்டிற்குச் சென்றபோது, வீட்டுக்காரர் கதவைத் திறந்தார்; அவர்கள் அவரிடம் பேச ஆரம்பித்ததும் உள்ளே அழைத்தார். “எனக்கு நிறையக் கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் எப்படி இந்தச் சமயம் பார்த்து வந்தீர்கள்?” என்று கேட்டார்.

“நாங்கள் சபையாக இந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்கிறோம்” என்று சகோதரர்கள் பதிலளித்தார்கள்.

“யெகோவாவின் சாட்சிகள் என்னுடைய வீட்டுக்கு வர வேண்டும் என்று நான் ஜெபம் செய்துகொண்டிருந்தேன். பொதுவாக, இந்தச் சமயத்தில் நான் ‘ஜாகிங்’ போய்விடுவேன், ஆனால் இன்றைக்குப் போகவில்லை. சரியாக இந்தச் சமயம் பார்த்து நீங்கள் வந்திருக்கிறீர்கள்!” என்று அந்த வீட்டுக்காரர் சொன்னார். தன்னுடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைத்ததாக அவர் நினைத்தார். அவர் வேலை பார்க்கிற இடத்தில், மற்றவர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி தவறாகப் பேசி வந்தார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் உண்மையா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், தகவல்களைத் திரட்ட நூலகத்திற்குச் சென்றார். அங்கே, யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தைப் பார்த்தார், அதை எடுத்து வாசித்தார்; சாட்சிகளைப் பற்றிப் பேசப்பட்டதெல்லாம் பொய் என்பதைப் புரிந்துகொண்டார். ஆகவே, யெகோவாவின் சாட்சிகளை எப்படியாவது சந்திக்க வேண்டுமென ஆசைப்பட்டார். அவரைச் சந்தித்த சகோதரர்கள் அவருக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தார்கள்; அவர் உடனடியாகக் கூட்டங்களுக்கும் வர ஆரம்பித்தார். அவர், படித்த விஷயங்களை முன்னாள் மனைவியிடமும் தன் மகளிடமும் சொன்னார்; அவர்களும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள்.

பிரிட்டன்

ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிற கர்ஸ்டி, தன்னுடைய பிராந்தியத்திலுள்ள காங்கோ மக்களுக்குச் சாட்சி கொடுப்பதற்காக பிரெஞ்சு மொழியையும் லிங்கால மொழியையும் கற்றார். ஒருநாள், நிறையப் பைகளோடு பஸ்ஸில் ஏற முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த ஒரு காங்கோ பெண்ணை அவர் பார்த்தார். கர்ஸ்டி அவருக்கு உதவுவதாக லிங்கால மொழியில் சொல்லி, அவருடைய பைகளை பஸ்ஸுக்குள் ஏற்றினார். “வெள்ளைக்காரரான நீங்கள் எப்படி லிங்கால மொழி பேசுகிறீர்கள்?” என்று அந்தப் பெண் கேட்டார். அதற்கு கர்ஸ்டி, தான் ஒரு லிங்கால மொழி சபைக்குச் செல்வதாகவும் மற்றவர்களிடம் பைபிளைப் பற்றிப் பேசுவதற்காக அங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் தனக்கு அந்த மொழியைக் கற்றுக்கொடுத்ததாகவும் பதிலளித்தார். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி அந்தப் பெண்ணிடம் சொல்ல கர்ஸ்டி விரும்பினார்; அதனால், அந்தப் பெண் போய்ச் சேரும் இடம் வரையாக அவருடன் தொடர்ந்து பயணித்தார். பிறகு, அந்தப் பெண்ணுடன் இறங்கி அவருடைய பைகளை மூன்றாவது மாடியிலிருந்த அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அவருடைய கணவரும் நான்கு பிள்ளைகளும் கர்ஸ்டியை வரவேற்றார்கள்; பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படுகிறதென அவர்களுக்கு அவர் காண்பித்தார். அந்தப் பெண்ணும் அவருடைய மூத்த பிள்ளைகள் இருவரும் இப்போது பைபிளைப் படித்து வருகிறார்கள். இந்த மூவரும் யெகோவாவுக்குப் பிரியமாய் நடக்க முயற்சி எடுத்து வருகிறார்கள்.

ஜார்ஜியா

பயனியர்களான இரண்டு இளம் சகோதரர்கள் மலைப்பாங்கான ஒரு பகுதிக்குக் குடிமாறிச் செல்லத் தீர்மானித்தார்கள்; அங்கு சில சாட்சிகளே இருந்தார்கள். அவர்கள் கிராமம் கிராமமாகப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள்; நிறையப் பேர் ஆர்வம் காட்டினார்கள். அந்தச் சகோதரர்கள் நூற்றுக்கணக்கான பிரசுரங்களை அளித்தார்கள், அநேக பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார்கள். அவர்கள் மலைப்பகுதிகளில் பிரசங்கிக்க ஆரம்பித்த சமயத்தில், அவர்களிடம் அதிகப் பொருள்கள் இருக்கவில்லை; எங்கே தூங்குவதென்றுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், தேவையானதெல்லாம் எப்போதுமே அவர்களுக்குக் கிடைத்தன. அந்தக் கிராமங்களிலிருந்த மக்கள் தங்களுடைய வீடுகளில் இரவில் தங்க அவர்களுக்கு இடமளித்ததோடு உணவும் கொடுத்தார்கள். சில சமயங்களில், அவர்களுடைய செய்தியைக் கேட்க விரும்பாத ஆட்களும்கூட தங்களுடைய வீடுகளில் இரவில் தங்குவதற்கும் உணவு அருந்துவதற்கும் அவர்களை அழைத்தார்கள். பிற்பாடு, அந்தச் சகோதரர்கள் அப்பிராந்தியத்தில் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். தெருவில் செல்லும்போதுகூட பலர் அவர்களிடம் வந்து பைபிள் படிப்பு வேண்டுமென கேட்பது சகஜமாக இருந்தது. ஆனால், அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பைபிள் படிப்புகளை நடத்தி வந்தார்கள்; ஆகவே, எத்தனை பைபிள் படிப்புகளை மட்டுமே தங்களால் நடத்த முடியுமென முடிவு செய்தார்கள். அப்படியிருந்தும், அவர்கள் சராசரியாக ஒவ்வொருவரும் 20-க்கும் அதிகமான பைபிள் படிப்புகளை மாதந்தோறும் நடத்தி வந்திருக்கிறார்கள்.

ஹங்கேரி

ஒரு சகோதரி, தினமும் பாட்டில்களில் பால் வாங்கி வந்தார்; பால்காரி, அச்சகோதரியுடைய வீட்டின் தடுப்பு வேலியில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஒரு பையில் அந்த பாட்டில்களை போட்டுச் செல்வாள். ஒருநாள் அச்சகோதரி காலி பாட்டில்களை அந்தப் பையில் வைத்தபோது, உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற ஒரு துண்டுப்பிரதியையும் அதில் வைத்தார். அதை வாசித்த பால்காரி சில கேள்விகளை ஒரு சிறிய பேப்பரில் எழுதி, அடுத்த முறை பால் பாட்டில்களைப் பையில் போட்டபோது இதையும் சேர்த்துப் போட்டாள்; தனக்கு ஒரு பைபிள் வேண்டுமென்றும் அதில் எழுதியிருந்தாள். இதைப் பார்த்து அந்தச் சகோதரி ஆச்சரியம் அடைந்தார். அவர் உடனடியாக அந்தப் பால்காரியைச் சந்திக்க அவள் குடியிருந்த பண்ணைக்குச் சென்றார்; பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்திலிருந்து அவளுக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தார். அந்தக் கேள்விகளுக்கு விடை தேடி அவள் இதற்குமுன் பல சர்ச்சுகளுக்குச் சென்றிருந்தாள்; ஆனால், தகுந்த விடை கிடைக்கவே இல்லை. சொல்லப்போனால், இன்னும் நிறையக் கேள்விகள் மனதில் எழுந்தன. அவளுடைய ஒரு மகளும் பைபிளில் அதிக ஆர்வம் காட்டியபோது அந்தச் சகோதரி பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தை அவளுக்குக் கொடுத்தார். இரவில் கெட்ட கனவுகளைப் பார்த்து அவள் விழித்துக்கொள்வதாக அவளுடைய அம்மா சொன்னாள். ஆனால், இந்தப் புத்தகத்திலுள்ள சில அதிகாரங்களை வாசித்த பிறகு, அவள் அந்தளவுக்குப் பயப்படுவதில்லை, இப்போது இரவில் நிம்மதியாகத் தூங்குகிறாள். அவர்களுக்கு பைபிள் படிப்பு தொடர்ந்து நடத்தப்படுகிறது; அம்மாவும் இரண்டு மகள்களும் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்குத் தவறாமல் செல்கிறார்கள்.

இத்தாலி

முழுநேர ஊழியம் செய்கிற கிறிஸ்டீனாவும் மாநெலும், உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியை மத்திய இத்தாலியிலுள்ள ஒரு புறநகர் பகுதியில் விநியோகித்து வந்தார்கள். ஒரு பண்ணையின் கொல்லைப் பக்கத்திலிருந்து ஏதேதோ சத்தம் வருவதை அவர்கள் கேட்டார்கள். அங்கிருந்த பெண் இவர்களைப் பார்த்ததும் “சீக்கிரம்! ஓடி வாங்க! கொஞ்சம் உதவி செய்யுங்க!” என்று கூச்சல் போட்டார். அங்கு ஓடிச் சென்ற சாட்சிகள், மூர்க்கமான ஒரு பெரிய பன்றி அதன் பட்டியிலிருந்து வெளியே வர போராடிக்கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்; அதைத் தடுக்க அந்தப் பெண் முயன்றுகொண்டிருந்தார். பட்டியின் கதவு உடைந்திருந்ததால், அந்தப் பன்றி பக்கத்திலுள்ள காட்டிற்கு ஓடிவிடுமோ என அந்தப் பெண் பயந்தார். கதவு திறந்துவிடாதபடி இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள அவர் தன்னந்தனியாக முயன்றுகொண்டிருந்தார். “நீங்கள் இதை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்; அதற்குள் நான் போய் இதை அடைப்பதற்கு ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு வருகிறேன்!” என்று கிறிஸ்டீனாவிடம் அலறினார். பன்றி என்றாலே ரொம்ப பயம் என்று கிறிஸ்டீனாவும் அலறினார். அதனால், அந்தப் பெண் மாநெலிடம் ஒரு பூசணிக்காயையும் கத்தியையும் கொடுத்து, “பயப்படாதீர்கள், இதைத் துண்டு துண்டாக வெட்டி அதற்குப் போட்டுக்கொண்டே இருங்கள். அதற்குள் ஒரு புதிய தாழ்ப்பாளைத் தேடி எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்” என்று சொன்னார்.

போனவர் பல நிமிடங்களாகியும் வரவில்லை. இதற்கிடையில், பன்றிக்குத் தீவனத்தைச் சீக்கிரம் சீக்கிரமாகப் போடும்படி மாநெலை கிறிஸ்டீனா அவசரப்படுத்தினார்; ஆனால், பூசணிக்காயின் தோல் கெட்டியாக இருந்ததால் அதை வெட்டுவதற்கு மாநெல் திண்டாடினார். ஒருவழியாக, அந்தப் பெண் வந்து கதவுக்குப் புதுத் தாழ்ப்பாளை மாட்டினார். பின்பு, பெருமூச்சு விட்டபடி, “கடவுள்தான் உங்கள் இரண்டு பேரையும் அனுப்பினார்!” என்று சொன்னார்.

“நீங்கள் சரியாகச் சொன்னீர்கள்!” என்று அவர்கள் பதிலளித்து, ஒரு துண்டுப்பிரதியை எடுத்து அவரிடம் காட்டினார்கள்.

உடனடியாக அந்தப் பெண், “இது ரொம்ப முக்கியமான விஷயம், இதை நின்றுகொண்டே பேச முடியாது. சாவகாசமாக உட்கார்ந்து பேச வேண்டும்” என்றார். பின்பு, சில நாற்காலிகளை எடுத்து வந்து வெளியில் போட்டார். அவர்கள் வெயிலில் உட்கார்ந்து பேசினார்கள். அந்தப் பெண் நிறையக் கேள்விகளைக் கேட்டார். அவர்கள் கொடுத்த பதில்களை மிகுந்த ஆர்வத்தோடும் சந்தோஷத்தோடும் கவனித்துக் கேட்டார். பிறகு, பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். அந்தப் பன்றி தப்பி ஓடவிருந்த சமயம் பார்த்து அங்கு சென்றதால் இந்த பைபிள் படிப்பு கிடைத்ததாக கிறிஸ்டீனாவும் மாநெலும் கூறுகிறார்கள்.

ஓசியானியா

நாடுகள் 30 மக்கள்தொகை 3,83,38,482 பிரஸ்தாபிகள் 99,816 பைபிள் படிப்புகள் 59,619

ஆஸ்திரேலியா ஃபிரெட் என்ற சகோதரர் அமைதியான கரையோர நகரிலுள்ள ஒருவருக்கு நம்முடைய மூன்று டிவிடி-களைக் கொடுத்துவிட்டு வந்தார். பிற்பாடு, அவரிடமிருந்து ஃபிரெட்டுக்கு ஒரு கடிதம் வந்தது; அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “அந்த டிவிடி-களைப் பார்த்தது, கவனித்துக் கேட்டது மன அமைதி அளித்தது. அதில் காட்டப்பட்ட ஆட்கள் சமாதானமாக, சந்தோஷமாக, புன்னகை பூத்த முகமாக இருந்ததைப் பார்த்த நானும் அதேபோல உணர்ந்தேன். என் வாழ்க்கையில் இவையெல்லாம் மறைந்து பல வருடங்களாகி விட்டன. எனக்கு முன்னால் ஒரு சிறந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை இப்போது நம்ப ஆரம்பித்திருக்கிறேன். முன்பெல்லாம், என் வீட்டிற்கு வந்த சாட்சிகளிடம் அநாகரிகமாகப் பேசியிருக்கிறேன். அதற்காக, உள்ளப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். உங்களுடைய ஆட்கள், என்மீதுள்ள அன்பினாலும் நற்செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற ஆசையினாலும்தான் என்னைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். யாருக்குத் தெரியும், ஒருநாள் ராஜ்ய மன்றத்தில் உங்களைச் சுற்றியிருப்பவர்களை நீங்கள் பார்க்கும்போது நானும் உங்களுக்குப் பின்னால் இருப்பதைப் பார்க்கலாம்.”

நியுஜிலாந்து இரண்டு சகோதரிகள், அரசாங்கம் நடத்துகிற குடும்பநல நிறுவனத்திற்குச் சென்று அதன் இயக்குநரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். அதற்காக, குடும்பங்களுக்கு உதவும் அந்த இயக்குநருக்கு உபயோகமான விஷயங்கள் அடங்கிய பிரசுரங்களை ஒரு “பேமிலி பேக்காக” தயார் செய்து வைத்தார்கள். அதில், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் ஆகிய புத்தகங்களும் “நல்ல பெற்றோராய் இருக்க ஏழு வழிகள்” என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரைகளைக் கொண்ட ஆகஸ்ட் 2007, விழித்தெழு! இதழும் “பிள்ளைகள் பத்திரம்!” என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரைகளைக் கொண்ட அக்டோபர் 2007, விழித்தெழு! இதழும் அடங்கும்.

அந்த இயக்குநரைச் சந்தித்தபோது, தாங்கள் வாலண்டியராக இந்த வேலையைச் செய்வதாகவும் குடும்பங்களுக்கு முக்கியமாக, ஆன்மீக ரீதியில் உதவ தங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் சொன்னார்கள். அவர்கள் கொண்டு சென்றிருந்த பேக்கிலுள்ள பிரசுரங்களைக் காட்டினார்கள். அவர்கள் சொன்னதை அந்த இயக்குநர் கவனித்துக் கேட்டு, பிரசுரங்களை ஏற்றுக்கொண்டார்; அதோடு, தன்னிடம் வேலைபார்க்கிற 35 பணியாளர்களிடமும் இந்த விஷயங்களைத் தெரிவிக்க விரும்புவதாகச் சொன்னார். விழித்தெழு!-வில் உள்ள கட்டுரைகள் தன்னுடைய பதிவேட்டில் உள்ள 503 குடும்பங்களுக்கும் பிரயோஜனமாக இருக்குமென்றும் அவர் கூறினார். அந்தச் சகோதரிகள், விழித்தெழு! பத்திரிகையின் 557 பிரதிகளை எப்படியோ கஷ்டப்பட்டு சேகரித்தார்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அந்த இயக்குநர் அவர்களுக்கு ஃபோன் செய்து, அவர்கள் கொடுத்த எல்லாப் பத்திரிகைகளும் அந்தக் குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதாகச் சொன்னார்.

பிஜி வில்யம் என்ற ஓர் இளைஞர் ரக்பி எனப்படும் ஒருவகை கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார்; தன்னுடைய தேசத்தின் சார்பாக அந்த விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்பது அவருடைய நீண்டகால ஆசை. அவருடைய தம்பி லியோனியும் அந்த விளையாட்டை வாழ்க்கைத் தொழிலாக்க வேண்டுமென ஆசைப்பட்டார்; ஆனால், ஒரு விசேஷ பயனியரோடு பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்ட பிறகு, தன்னால் இரண்டு எஜமான்களுக்குச் சேவை செய்ய முடியாது என்பதை உணர்ந்தார். அவர் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார், ரக்பி விளையாட்டை விட்டுவிட்டார். சாட்சியாக இருந்த அவருடைய அம்மா, கூட்டங்களுக்கு உடுத்துவதற்காக அவருக்குக் கொஞ்சம் டிரஸ் வாங்கிக் கொடுத்தார்; ஆனால், ஒரு சண்டை வந்ததில் லியோனியின் டிரஸ்ஸை வில்யம் கிழித்துவிட்டார். லியோனிக்கு ரொம்ப வேதனையாகிவிட்டது; ஆனாலும், பழிக்குப் பழி வாங்க விரும்பவில்லை. பிற்பாடு, லியோனி தான் அறுவடை செய்த தர்ப்பூசணி பழங்களை மார்க்கெட்டில் விற்று, அதில் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை எடுத்து கூட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கான டிரஸ், பைபிள், பேனாக்கள், ஹைலைட்டர்கள் ஆகியவற்றை வாங்கினார். வில்யமுக்கும் சேர்த்து அவற்றை வாங்கினார். தம்பி மீதுள்ள வெறுப்பில் அவனுக்குக் கெடுதல் செய்தபோதிலும் அவன் அன்போடு செய்த காரியம் வில்யமின் மனதைத் தொட்டது. அவர் புதிய டிரஸ்ஸைப் போட்டுக்கொண்டு, கூட்டத்திற்குச் சென்று தன்னுடைய தம்பிக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார். வில்யமும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். அண்ணன் தம்பி இருவரும் ஆன்மீக ரீதியில் முன்னேறினார்கள். இருவரும் ஞானஸ்நானம் எடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில், வில்யமுக்கு ஐரோப்பாவில் ரக்பி விளையாடுவதற்கான ஓர் அழைப்பு கிடைத்தது. அந்த விளையாட்டில் கலந்துகொள்வதால் கைநிறைய பணத்தோடு பேரும் புகழும்கூட கிடைக்கும் என்பதால் நிறையப் பேர் அப்படியொரு அழைப்புக்காகக் கனவுகண்டு கொண்டிருந்தார்கள். என்றாலும், அவருடைய லட்சியங்கள் மாறிவிட்டிருந்ததால், யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணிக்கவே தீர்மானித்தார். ஞானஸ்நானம் பெற்ற பிறகு அவர்கள் இருவரும் ஆறு மாதங்களுக்குத் துணைப் பயனியர் ஊழியம் செய்தார்கள். பிள்ளைகளின் நல்ல முன்மாதிரியைப் பார்த்த அப்பா வைசேயாவும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். வைசேயா பெரும் மாற்றங்களைச் செய்து, தன்னுடைய இரண்டு மகள்களோடு விசேஷ மாநாட்டு தினத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.

[பக்கம் 45-ன் படங்கள்]

தூக்கத்தைத் தியாகம் செய்தும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் ஒரு சகோதரி பைபிள் படிப்பு நடத்தினார்

[பக்கம் 46-ன் படம்]

இவருடைய நேர்மை, சாட்சி கொடுக்க வழி செய்தது

[பக்கம் 48-ன் படம்]

குடும்ப வழிபாடு, பள்ளியில் சாட்சி கொடுக்க ஸ்டீஃபனுக்கு உதவியது

[பக்கம் 49-ன் படம்]

இவர் விடாமல் கதவைத் தட்டியது ஓர் உயிரைக் காப்பாற்றியது

[பக்கம் 50-ன் படம்]

சிறு பிள்ளையாகவோ வயதானவராகவோ இல்லாத ஒரு சாட்சியை இவள் தேடிக் கண்டுபிடித்தாள்

[பக்கம் 55-ன் படம்]

இவர் ஒரேவொரு “டுக்டுக்” வண்டிக்கு ஏற்பாடு செய்தார்

[பக்கம் 58-ன் படம்]

மற்றொரு மொழியைக் கற்றுக்கொண்டது பைபிள் படிப்புக்கு வழிசெய்தது

[பக்கம் 60-ன் படம்]

பல விதங்களில் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கலாம்

[பக்கம் 63-ன் படம்]

“பேமலி பேக்கை” தயார் செய்கிறார்கள்

[பக்கம் 64-ன் படம்]

யெகோவாவைச் சேவிப்பதற்காக பணத்தை அள்ளித்தரும் ரக்பி விளையாட்டை விட்டுவிட்டார்கள்