Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 8

கூட்டங்களுக்குப் போகும்போது ஏன் நன்றாக உடை உடுத்த வேண்டும்?

கூட்டங்களுக்குப் போகும்போது ஏன் நன்றாக உடை உடுத்த வேண்டும்?

ஐஸ்லாந்து

மெக்சிகோ

கினி-பிஸ்ஸாவ்

பிலிப்பைன்ஸ்

இந்தப் புத்தகத்தில் இருக்கிற படங்களைப் பார்த்தீர்களா? கூட்டத்திற்குப் போகும்போது யெகோவாவின் சாட்சிகள் நன்றாக உடை உடுத்தி, தலைவாரி இருப்பதை கவனித்தீர்களா? நாங்கள் ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

கடவுளுக்கு மரியாதை காட்டுவதற்காக. கடவுள் நம் வெளித்தோற்றத்தை பார்ப்பதில்லை, நம் மனதைத்தான் பார்க்கிறார். (1 சாமுவேல் 16:7) இருந்தாலும், கூட்டத்திற்குப் போகும்போது, கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் மரியாதை காட்டும் விதத்தில் உடை உடுத்த வேண்டும். ஒருவேளை, முக்கியமான ஒரு அதிகாரியைப் பார்க்கப் போகும்போது அவருக்கு மரியாதை காட்டும் விதத்தில் உடுத்துவோம். அப்படியென்றால், ‘என்றென்றும் ராஜாவாக’ இருக்கும் யெகோவாவை வணங்குவதற்குப் போகும்போது நம் உடைக்கு இன்னும் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்!—1 தீமோத்தேயு 1:17.

பைபிள் சொல்வதுபோல் நடந்துகொள்வதற்காக. உடை உடுத்தும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள், ‘அடக்கமாகவும் தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும்’ இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 2:9, 10) ‘அடக்கமாக’ உடை உடுத்துவது என்றால் என்ன? நாம் உடுத்துகிற உடை ஆடம்பரமாகவோ கவர்ச்சியாகவோ உடம்பு தெரிகிற மாதிரியோ இருக்கக் கூடாது. ‘தெளிந்த புத்தியோடு’ உடை உடுத்துவது என்றால் என்ன? நாம் அலங்கோலமாக ஏனோதானோவென்று உடை உடுத்தக் கூடாது. இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டால், நமக்குப் பிடித்த மாதிரி விதவிதமாக உடை உடுத்தலாம். அழகாக, அடக்கமாக உடை உடுத்தும்போது நம் “மீட்பரான கடவுளுடைய போதனைகளை . . .  அலங்கரிக்க முடியும்.” ‘அவரை மகிமைப்படுத்தவும்’ முடியும். (தீத்து 2:10; 1 பேதுரு 2:12) கூட்டங்களுக்கு நாம் நன்றாக உடை உடுத்தும்போது யெகோவாவின் வணக்கத்தை மற்றவர்கள் உயர்வாக மதிப்பார்கள்.

உங்களிடம் நல்ல துணிமணி எதுவும் இல்லையே என்று நினைத்து கூட்டத்திற்கு வராமல் இருந்துவிடாதீர்கள். விலை அதிகமாக இருக்கிற துணிமணிகளைத்தான் போட்டுக்கொண்டு வர வேண்டும் என்று அவசியமில்லை. சுத்தமாக, அடக்கமாக உடை உடுத்திக்கொண்டு வந்தால் போதும்.

  • கடவுளை வணங்குவதற்குப் போகும்போது நாம் எப்படி உடை உடுத்த வேண்டும்?

  • உடை உடுத்தும்போது என்ன பைபிள் ஆலோசனைகளை மனதில் வைக்க வேண்டும்?