சங்கீதம் 69:1-36
இசைக் குழுவின் தலைவனுக்கு; “லில்லி மலர்கள்” என்ற இசையில்; தாவீதின் பாடல்.
69 கடவுளே, வெள்ளம் என் கழுத்துவரை வந்துவிட்டது.*என்னைக் காப்பாற்றுங்கள்.+
2 புதைசேற்றுக்குள் நான் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன், நிற்பதற்குத் தரை இல்லை.+
ஆழமான தண்ணீரில் சிக்கித் தவிக்கிறேன்.வெள்ளம் என்னை அடித்துக்கொண்டு போகிறது.+
3 உதவிக்காகக் கத்திக் கத்திக் களைத்துப்போய்விட்டேன்.+என் தொண்டையே வறண்டுவிட்டது.
என் கடவுளுக்காகக் காத்திருந்து காத்திருந்து என் கண்கள் பூத்துப்போய்விட்டன.+
4 காரணமில்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்,+என் தலைமுடியைவிட அதிகமாகிவிட்டார்கள்.
என்னை ஒழித்துக்கட்டப் பார்க்கிற நயவஞ்சகமான எதிரிகள்,ஏராளமாகப் பெருகிவிட்டார்கள்.
திருடாததைக் கொடுக்கச் சொல்லி நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்.
5 கடவுளே, என்னுடைய முட்டாள்தனம் உங்களுக்கே தெரியும்.என் குற்றங்களும் உங்களுக்குத் தெரியாமல் இல்லை.
6 உன்னதப் பேரரசரே, பரலோகப் படைகளின் யெகோவாவே,உங்களை நம்பியிருக்கிறவர்களுக்கு என்னால் தலைகுனிவு வந்துவிடக் கூடாது.
இஸ்ரவேலின் கடவுளே, உங்களைத் தேடுகிறவர்களுக்கு என்னால் அவமானம் வந்துவிடக் கூடாது.
7 உங்களுக்காகப் பழிப்பேச்சைச் சகிக்கிறேன்.+அவமானம் தாங்க முடியவில்லை.+
8 என் சகோதரர்களுக்கு நான் முன்பின் தெரியாதவனைப் போல ஆகிவிட்டேன்.என் தாயின் வயிற்றில் பிறந்தவர்களுக்கு அன்னியனைப் போல ஆகிவிட்டேன்.+
9 உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிகிறது.+உங்களைப் பழித்துப் பேசியவர்களின் பழிப்பேச்சுகளை நான் தாங்கிக்கொண்டேன்.+
10 என்னைத் தாழ்த்திக்கொண்டு* விரதம் இருந்தபோது,பழித்துப் பேசப்பட்டேன்.
11 நான் துக்கத் துணி போட்டுக்கொண்டபோது,அவர்களுக்குக் கேலிப்பொருளானேன்.
12 நகரவாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.குடிகாரர்கள் என்னைப் பற்றிப் பாடுகிறார்கள்.
13 ஆனால் யெகோவாவே, ஏற்ற நேரத்தில் என் ஜெபம் உங்களிடம் வந்துசேரட்டும்.+கடவுளே, உங்களுடைய அளவுகடந்த அன்பினால்* எனக்குப் பதில் கொடுங்கள்.
நீங்கள் நம்பகமான மீட்பர் என்பதைக் காட்டுங்கள்.+
14 புதைசேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடுங்கள்.புதைந்துபோக என்னை விட்டுவிடாதீர்கள்.
என்னை வெறுக்கிறவர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்.ஆழமான தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிடுங்கள்.+
15 பாய்ந்து வருகிற வெள்ளம் என்னை அடித்துக்கொண்டுபோக விட்டுவிடாதீர்கள்.+ஆழமான தண்ணீர் என்னை அமிழ்த்திவிட விட்டுவிடாதீர்கள்.சவக்குழி* என்னை மூடிவிட விட்டுவிடாதீர்கள்.+
16 யெகோவாவே, எனக்குப் பதில் கொடுங்கள்; நீங்கள் காட்டும் மாறாத அன்பு அருமையானது.+
அளவுகடந்த இரக்கத்தோடு என்னை நோக்கிப் பாருங்கள்.+
17 அடியேனிடமிருந்து உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளாதீர்கள்.+
எனக்குச் சீக்கிரமாகப் பதில் சொல்லுங்கள், நான் இக்கட்டில் தவிக்கிறேன்.+
18 என் பக்கத்தில் வந்து என்னைக் காப்பாற்றுங்கள்.என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவியுங்கள்.
19 எனக்கு ஏற்பட்ட அவமானமும், தலைகுனிவும், வெட்கக்கேடும்+ உங்களுக்கே தெரியும்.
என்னுடைய எதிரிகள் எல்லாரையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.
20 பழிப்பேச்சைக் கேட்டுக் கேட்டு என் உள்ளம் உடைந்துவிட்டது, ஆறாத ரணமாகிவிட்டது.*
யாராவது என்மேல் பரிதாபப்படுவார்களா என்று பார்த்தேன், யாருமே இல்லை.+யாராவது எனக்கு ஆறுதல் சொல்வார்களா என்று தேடினேன், ஒருவருமே இல்லை.+
21 உணவுக்குப் பதிலாக எனக்கு விஷத்தை* கொடுத்தார்கள்.+என் தாகத்துக்குக் காடியைத் தந்தார்கள்.+
22 அவர்களுடைய விருந்தே* அவர்களுக்குக் கண்ணியாக ஆகட்டும்.அவர்களுடைய செல்வச் செழிப்பே அவர்களுக்குப் பொறியாக ஆகட்டும்.+
23 பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருண்டு போகட்டும்.அவர்களுடைய இடுப்புகள் எந்நேரமும் நடுநடுங்கட்டும்.
24 உங்களுடைய கடும் கோபத்தை அவர்கள்மேல் கொட்டுங்கள்.உங்களுடைய கோபத் தீ அவர்களை விரட்டிப் பிடிக்கட்டும்.+
25 அவர்களுடைய முகாம்கள் வெறிச்சோடிப் போகட்டும்.அவர்களுடைய கூடாரங்கள் ஆளில்லாமல் கிடக்கட்டும்.+
26 ஏனென்றால், நீங்கள் தாக்கிய ஆளை அவர்கள் துரத்துகிறார்கள்.நீங்கள் காயப்படுத்திய ஆட்களின் வேதனைகளைப் பற்றி எப்போதும் பேசுகிறார்கள்.
27 குற்றத்துக்குமேல் குற்றத்தை அவர்கள்மீது சுமத்துங்கள்.உங்களுடைய நீதியில் அவர்களுக்கு எந்தப் பங்கும் கிடைக்காமல் போகட்டும்.
28 வாழ்வின்* புத்தகத்திலிருந்து அவர்களுடைய பெயர் துடைத்தழிக்கப்படட்டும்.+நீதிமான்களின் பட்டியலில் அவர்களுடைய பெயர் சேர்க்கப்படாமல் போகட்டும்.+
29 நான் கஷ்டத்திலும் வேதனையிலும் தவிக்கிறேன்.+
கடவுளே, உங்களுடைய காப்பாற்றும் வல்லமை என்னைப் பாதுகாக்கட்டும்.
30 கடவுளின் பெயரை நான் புகழ்ந்து பாடுவேன்.நன்றி சொல்லி அவரை மகிமைப்படுத்துவேன்.
31 காளையைவிட இதைத்தான் யெகோவா அதிகமாக விரும்புவார்.கொம்புகளும் குளம்புகளும் உள்ள இளம் காளையைவிட இதைத்தான் விரும்புவார்.+
32 தாழ்மையானவர்கள்* அதைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள்.
கடவுளைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இதயம் புத்துயிர் பெறட்டும்.
33 ஏனென்றால், ஏழைகளுடைய ஜெபத்தை யெகோவா கேட்கிறார்.+சிறைபிடிக்கப்பட்ட தன்னுடைய மக்களை அலட்சியம் செய்ய மாட்டார்.+
34 வானமும் பூமியும் அவரைப் புகழட்டும்.+கடல்களும் அவற்றில் நீந்துகிற எல்லா உயிர்களும் அவரைப் புகழட்டும்.
35 ஏனென்றால், சீயோனைக் கடவுள் காப்பாற்றுவார்.+யூதாவின் நகரங்களைத் திரும்பக் கட்டுவார்.அவர்கள் அங்கே குடியிருந்து, அதை* சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
36 அவருடைய ஊழியர்களின் வாரிசுகள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள்+ அதில் குடியிருப்பார்கள்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “வெள்ளத்தில் மூழ்கிவிடும் நிலையில் இருக்கிறேன்.”
^ அல்லது, “நான் அழுதுகொண்டு.”
^ வே.வா., “மாறாத அன்பினால்.”
^ வே.வா., “ஆழ்கிணறு.”
^ வே.வா., “நம்பிக்கையிழந்த நிலைக்குப் போய்விட்டேன்.”
^ வே.வா., “விஷச்செடியை.”
^ நே.மொ., “மேஜையே.”
^ வே.வா., “வாழ்கிறவர்களுக்கான.”
^ வே.வா., “சாந்தமானவர்கள்.”
^ அதாவது, “அந்தத் தேசத்தை.”