நீதிமொழிகள் 16:1-33
16 ஒருவன் தன் இதயத்தில் சில விஷயங்களை யோசித்து* வைக்கலாம்.ஆனால், அவன் சொல்கிற பதில்* யெகோவாவிடமிருந்தே வருகிறது.+
2 மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுக்குச் சரியாகத் தோன்றுகின்றன.+ஆனால், அவனுடைய உள்நோக்கத்தை யெகோவா ஆராய்கிறார்.+
3 நீ எதைச் செய்தாலும் அதை யெகோவாவின் கையில் ஒப்படைத்துவிடு.+அப்போது, உன் திட்டங்கள் வெற்றி பெறும்.
4 யெகோவா எல்லாவற்றையும் தன்னுடைய நோக்கத்தின்படி நடக்க வைத்திருக்கிறார்,பொல்லாதவனையும் அழிவு நாளுக்கென்று விட்டு வைத்திருக்கிறார்.+
5 இதயத்தில் கர்வமுள்ள எவனையும் யெகோவா அருவருக்கிறார்.+
தண்டனையிலிருந்து அவன் தப்பிக்கவே முடியாது.
6 மாறாத அன்பாலும் உண்மைத்தன்மையாலும் குற்றம் மன்னிக்கப்படும்.+யெகோவாவுக்குப் பயப்படுகிறவன் கெட்டதைவிட்டு விலகுகிறான்.+
7 ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால்,அவனுடைய எதிரிகள்கூட அவனிடம் சமாதானமாவதற்கு அவர் வழிசெய்வார்.+
8 அநியாயம் செய்து கைநிறைய சம்பாதிப்பதைவிட,+நியாயமான வழியில் கொஞ்சம் சம்பாதிப்பதே மேல்.+
9 எந்த வழியில் போக வேண்டுமென்று ஒருவன் தன் உள்ளத்தில் திட்டம் போடலாம்.ஆனால், யெகோவாதான் அவனுடைய காலடிகளுக்கு வழிகாட்டுகிறார்.+
10 ராஜாவின் வாயிலிருந்து கடவுளின் தீர்ப்புதான் வர வேண்டும்.+ராஜா ஒருநாளும் நியாயத்தைப் புரட்டக் கூடாது.+
11 சரியான அளவுகோல்களும் தராசுகளும் யெகோவாவிடமிருந்து வந்தவை.பையில் இருக்கிற எடைக்கற்களெல்லாம் அவரால் உண்டானவை.+
12 அக்கிரமங்களை ராஜாக்கள் அருவருக்கிறார்கள்.+ஏனென்றால், அவர்களுடைய சிம்மாசனம் நீதியால் உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது.+
13 நீதியான பேச்சை ராஜாக்கள் விரும்புகிறார்கள்.
நேர்மையாகப் பேசுகிறவர்களை அவர்கள் நேசிக்கிறார்கள்.+
14 ராஜாவின் கடும் கோபம் மரணத்தின் தூதுவனைப் போல் இருக்கிறது.+ஆனால், ஞானமுள்ளவன் அதைத் தணிக்கிறான்.*+
15 ராஜாவின் முகம் பிரகாசிக்கும்போது, ஒருவருடைய வாழ்க்கை பிரகாசமாகிறது.அவர் காட்டுகிற கருணை வசந்த கால மழைமேகம்போல் இருக்கிறது.+
16 தங்கத்தைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு மேலானது!+
வெள்ளியைச் சம்பாதிப்பதைவிட புத்தியை* சம்பாதிப்பது எவ்வளவு நல்லது!+
17 நேர்வழியில் நடக்கிறவன் தவறான வழியைத் தவிர்க்கிறான்.
தன் வழியைக் காத்துக்கொள்கிறவன் தன் உயிரைப் பாதுகாக்கிறான்.+
18 அகம்பாவம் வந்தால் அழிவு வரும்.ஆணவம் வந்தால் அடிசறுக்கும்.+
19 தலைக்கனம் பிடித்தவர்களோடு சேர்ந்து கொள்ளைப்பொருளைப் பங்குபோடுவதைவிட,தாழ்மையானவர்களோடு* சேர்ந்து மனத்தாழ்மையாக இருப்பது நல்லது.+
20 விவேகத்தோடு ஒரு காரியத்தைச் செய்கிறவன் வெற்றி* பெறுவான்.யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.
21 இதயத்தில் ஞானம் உள்ளவன் புத்தி* உள்ளவன் என்று சொல்லப்படுவான்.+கனிவாக* பேசுகிறவனுக்கு மற்றவர்களைச் சம்மதிக்க வைக்கும் திறமை இருக்கிறது.+
22 விவேகமுள்ளவர்களுக்கு அவர்களுடைய விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றுபோல் இருக்கிறது.ஆனால், முட்டாள்கள் தங்கள் முட்டாள்தனத்தாலேயே கண்டிக்கப்படுகிறார்கள்.
23 ஞானமுள்ளவனின் இதயம் அவனை விவேகமாகப் பேச வைக்கிறது.+பக்குவமாகப் பேசி மற்றவர்களைச் சம்மதிக்க வைக்கும் திறமையைக் கொடுக்கிறது.
24 இனிய வார்த்தைகள் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன்போல் இருக்கின்றன.மனதுக்கு இனிமையாகவும் எலும்புகளுக்கு அருமருந்தாகவும் இருக்கின்றன.+
25 மனுஷனுக்குச் சரியென்று தோன்றுகிற வழி உண்டு.ஆனால், அது கடைசியில் மரணத்தில்தான் கொண்டுபோய்விடும்.+
26 வயிற்றுப் பசிதான் ஓர் உழைப்பாளியைப் பாடுபட்டு உழைக்கச் செய்கிறது.அதுதான்* அவனை வேலை செய்யத் தூண்டுகிறது.+
27 உதவாக்கரை மனுஷன் கெட்ட காரியங்களைக் கிளறி எடுக்கிறான்.+அவனுடைய பேச்சு சுட்டுப்பொசுக்கும் நெருப்புபோல் இருக்கிறது.+
28 சதிகாரன் பிரிவினைகளை உண்டாக்குகிறான்.+இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் உயிர் நண்பர்களைக்கூட பிரித்துவிடுகிறான்.+
29 வன்முறைக்காரன் அடுத்தவனுக்கு ஆசைகாட்டிஅவனைத் தவறான வழிக்குக் கொண்டுபோகிறான்.
30 அவன் கண்ணால் ஜாடை செய்து சதித்திட்டம் தீட்டுகிறான்.
உதடுகளைக் கடித்துக்கொண்டு திட்டத்தை முடிக்கிறான்.
31 நீதியான வழியில் நடப்பவர்களுக்கு+நரைமுடி அழகான* கிரீடம்.+
32 பலசாலியைவிட சட்டெனக் கோபப்படாதவனே+ மேலானவன்.நகரத்தைக் கைப்பற்றுகிறவனைவிட கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனே மேலானவன்.+
33 மடியில் குலுக்கல் போடப்படலாம்.+ஆனால், எல்லா முடிவுகளும் யெகோவாவிடமிருந்தே வருகின்றன.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “சரியான பதில்.”
^ வே.வா., “சில யோசனைகளை அடுக்கி.”
^ வே.வா., “தவிர்க்கிறான்.”
^ வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”
^ வே.வா., “சாந்தமானவர்களோடு.”
^ நே.மொ., “நன்மை.”
^ வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”
^ வே.வா., “இனிமையாக.”
^ நே.மொ., “அவனுடைய வாய்தான்.”
^ வே.வா., “மகிமையான.”