மத்தேயு எழுதியது 11:1-30
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
சுற்றியுள்ள நகரங்களில்: அநேகமாக, அந்தப் பகுதியில் (கலிலேயாவில்) இருந்த யூத நகரங்களைக் குறிக்கின்றன.
கற்பிப்பதற்கும் பிரசங்கிப்பதற்கும்: மத் 4:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
கிறிஸ்து: இந்தப் பட்டப்பெயரின் அர்த்தம், “அபிஷேகம் செய்யப்பட்டவர்.” கிரேக்கில் இந்த வசனத்தில் “கிறிஸ்து” என்ற வார்த்தைக்கு முன்பு நிச்சயச் சுட்டிடைச்சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா, அதாவது விசேஷ அர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டிருந்த ஒருவர், என்பதை இது காட்டுகிறது.—மத் 1:1; 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
வரவேண்டியவர்: அதாவது, “மேசியா.”—சங் 118:26; மத் 3:11; 21:9; 23:39.
தொழுநோயாளிகள்: மத் 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “தொழுநோய்; தொழுநோயாளி” என்ற தலைப்பையும் பாருங்கள்.
இதோ!: மத் 1:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
ஸ்நானகரைவிட: வே.வா., “அமிழ்த்தியெடுப்பவர்; முக்கியெடுப்பவர்.”—மத் 3:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மக்கள் தீவிரமாக அடைய முயலுகிற லட்சியமாக இருக்கிறது; அப்படித் தீவிரமாக அடைய முயலுகிறவர்கள்: ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட இரண்டு கிரேக்க வார்த்தைகள், “தீவிரமாக அடைய முயலுகிற” என்றும் “தீவிரமாக அடைய முயலுகிறவர்கள்” என்றும் இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; இந்த வார்த்தைகள், மிக மும்முரமாக ஏதோவொன்றை செய்வதை அல்லது செய்ய முயற்சி எடுப்பதைக் குறிக்கின்றன. இவை எதிர்மறையான அர்த்தத்தைத் தருவதாக, அதாவது வன்முறையாகத் தாக்குவதையோ தாக்கப்படுவதையோ குறிப்பதாக, சில பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வார்த்தைகள், “உற்சாகத்தோடு ஒன்றை நாடித் தேடுவதை; மிக ஊக்கமாக ஒன்றை அடைய முயலுவதை” குறிக்கின்றன; இதை இந்த வசனத்தின் சூழமைவும், லூ 16:16-ல் உள்ள வார்த்தைகளும் காட்டுகின்றன. (பைபிளில் மத் 11:12 தவிர, லூ 16:16-ல் மட்டும்தான் இந்தக் கிரேக்க வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.) சிலர் யோவான் ஸ்நானகர் பிரசங்கித்ததைக் கேட்டு பெரிய மாற்றங்கள் செய்ததை அல்லது தீவிரமாக முயற்சிகள் எடுத்ததை இந்த வார்த்தைகள் அநேகமாக விவரிக்கின்றன. அவர்கள் அவ்வளவு தீவிரம் காட்டியதால் கடவுளுடைய அரசாங்கத்தின் உறுப்பினர்களாக ஆகும் வாய்ப்பைப் பெற்றார்கள்.
தீர்க்கதரிசனப் புத்தகங்களும் . . . திருச்சட்டமும்: மற்ற வசனங்களில், திருச்சட்டம் முதலாவதாகவும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் இரண்டாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. (மத் 5:17; 7:12; 22:40; லூ 16:16); ஆனால், இங்கு மட்டும் தலைகீழாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அடிப்படையில், இரண்டுமே ஒரே அர்த்தத்தைத் தருவதாகத் தெரிகிறது. (மத் 5:17-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) இருந்தாலும் இந்த வசனம், பைபிளிலுள்ள தீர்க்கதரிசனங்களை அதிகமாக வலியுறுத்துவதுபோல் தெரிகிறது. திருச்சட்டமும்கூட ‘தீர்க்கதரிசனங்களை அறிவித்ததாக’ இந்த வசனம் சொல்கிறது. இப்படி, அதில் தீர்க்கதரிசனங்கள் அடங்கியிருந்ததை இது வலியுறுத்துகிறது.
எலியா: “யெகோவா என் கடவுள்” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெயப் பெயர்.
நெஞ்சில் அடித்துக்கொண்டு: தாங்க முடியாத துக்கத்தினாலோ குற்றவுணர்வினாலோ வருத்தத்தினாலோ கைகளால் திரும்பத் திரும்ப நெஞ்சில் அடித்துக்கொள்வதைக் குறிக்கிறது.—ஏசா 32:12; நாகூ 2:7; லூ 23:48.
சாப்பிடவும் இல்லை, குடிக்கவும் இல்லை: அநேகமாக, யோவான் தன்னைத்தானே வருத்திக்கொண்டு வாழ்ந்ததை, அதாவது விரதம் இருந்ததையும் நசரேயராக எந்த மதுவையும் குடிக்காமல் இருந்ததையும், குறிக்கிறது.—எண் 6:2-4; மத் 9:14, 15; லூ 1:15; 7:33.
மனிதகுமாரனோ: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வரி வசூலிப்பவர்களுக்கும்: மத் 5:46-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
கப்பர்நகூமே: மத் 4:13-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வானம்வரை: மிகவும் விசேஷமான நிலையில் இருப்பதைக் குறிப்பதற்காக இங்கே உருவகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கல்லறைவரை: வே.வா., “ஹேடீஸ்வரை.” இது இறந்தவர்களின் நிலையைக் குறிக்கிறது. (சொல் பட்டியலில் “கல்லறை” என்ற தலைப்பைப் பாருங்கள்.) இந்த வசனத்தில், இது அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது; அதாவது, கப்பர்நகூம் தாழ்த்தப்படும் என்பதைக் குறிக்கிறது.
உனக்குக் கிடைக்கும் தண்டனை: ‘உனக்கு’ என்ற வார்த்தை கிரேக்கில் ஒருமையில் கொடுக்கப்பட்டிருக்கிறது; அநேகமாக, அந்த நகரத்தைக் குறிக்கிறது.
உனக்குச் சொல்கிறேன்: இங்கே ‘உனக்கு’ என்ற வார்த்தை கிரேக்கில் பன்மையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சிறுபிள்ளைகளுக்கு: வே.வா., “சிறுபிள்ளை போன்றவர்களுக்கு.” மனத்தாழ்மையாகவும் கற்றுக்கொள்ள ஆர்வமாகவும் இருப்பவர்களைக் குறிக்கிறது.
பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே: ‘பாரமான சுமை சுமந்தவர்களை,’ அதாவது கவலையால் துவண்டுபோயிருந்த அல்லது உழைத்துக் களைத்துப்போயிருந்த ஆட்களை, தன்னிடம் வரும்படி இயேசு அழைத்தார். மதத் தலைவர்கள் திருச்சட்டத்தோடு நிறைய பாரம்பரியங்களைச் சேர்த்திருந்ததால், யெகோவாவின் வணக்கம் மக்களுக்குப் பாரமாக ஆகியிருந்தது. (மத் 23:4) புத்துணர்ச்சி தர வேண்டியிருந்த ஓய்வுநாளும்கூட பாரமாக ஆகியிருந்தது.—யாத் 23:12; மாற் 2:23-28; லூ 6:1-11.
நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்: “புத்துணர்ச்சி” என்பதற்கான கிரேக்க வார்த்தை ஓய்வெடுப்பதைக் குறிக்கலாம் (மத் 26:45; மாற் 6:31), அல்லது களைப்பு நீங்கி புதுத்தெம்பு பெறுவதையும் குறிக்கலாம் (2கொ 7:13; பிலே 7). இந்த வசனத்தின் சூழமைவைப் பார்க்கும்போது, இயேசுவின் “நுகத்தடியை” (மத் 11:29) ஏற்றுக்கொள்வது ஓய்வெடுப்பதை அல்ல, சேவை செய்வதைக் குறிக்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வினைச்சொல் செய்வினை வடிவத்தில் இருப்பதால், இயேசுவே புத்துணர்ச்சி கொடுப்பதைச் சுட்டிக்காட்டுகிறது; சோர்ந்துபோனவர்கள் தன்னுடைய மென்மையான, லேசான நுகத்தடியை விரும்பி ஏற்றுக்கொள்வதற்காக அவர்களுக்குப் புதுத்தெம்பையும் பலத்தையும் அவர் அளிப்பதைக் குறிக்கிறது.
சாந்தமும்: மத் 5:5-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மனத்தாழ்மையுமாக: நே.மொ., “இதயத்தில் தாழ்மையாக.” இதற்கான கிரேக்க வார்த்தை, பகட்டாக இல்லாமல் பணிவாக இருப்பதைக் குறிக்கிறது. இது யாக் 4:6; 1பே 5:5 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது; அங்கே ‘தாழ்மை உள்ளவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடவுளையும் மற்றவர்களையும் ஒருவர் கருதுகிற விதமும், அவர்களுக்கு முன்பாக அவர் நடந்துகொள்கிற விதமும், அவருடைய அடையாளப்பூர்வ இதயத்தின் நிலையைக் காட்டுகின்றன.
என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு: அதிகாரத்துக்கும் அறிவுரைக்கும் அடிபணிவதைக் குறிப்பதற்காக “நுகத்தடி” என்ற வார்த்தையை இயேசு அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தினார். இரட்டை நுகத்தடியைப் பற்றி இயேசு இங்கே சொல்லியிருந்தால், கடவுள் தன்மேல் வைத்த நுகத்தடியைத் தன்னோடு சேர்ந்து சுமக்கும்படி தன் சீஷர்களை அழைக்கிறார் என்றும், அதைச் சுமக்க அவர்களுக்கு அவர் உதவுவார் என்றும் அர்த்தம். இந்த அர்த்தத்தின்படி, “என்னோடு சேர்ந்து என் நுகத்தடியின் கீழ் வாருங்கள்” என்றும் இந்த வார்த்தைகளை மொழிபெயர்க்கலாம். ஒருவேளை, மற்றவர்கள்மேல் தான் வைக்கும் நுகத்தடியைப் பற்றி அவர் சொல்லியிருந்தால், தன் சீஷராகத் தன்னுடைய அதிகாரத்துக்கும் அறிவுரைக்கும் அடிபணிய வேண்டும் என்று அவர் அர்த்தப்படுத்தியிருப்பார்.—சொல் பட்டியலில் “நுகத்தடி” என்ற தலைப்பைப் பாருங்கள்.
மீடியா
“அரண்மனைகளில்” (லூ 7:25) அல்லது “ராஜாக்களுடைய அரண்மனைகளில்” (மத் 11:8) வாழ்கிறவர்களைப் பற்றி இயேசு சொன்னபோது, மகா ஏரோது கட்டிய பல சொகுசான மாளிகைகள் மக்களின் ஞாபகத்துக்கு வந்திருக்கலாம். இங்கே போட்டோவில் காட்டப்பட்டிருப்பது, எரிகோவில் மகா ஏரோது கட்டிய குளிர் கால மாளிகையின் ஒரு பகுதியுடைய இடிபாடுகள். இந்தக் கட்டிடத்தில், தூண்கள் நிறைந்த ஒரு வரவேற்பு அறை இருந்தது. அதன் நீளம் 29 மீ. (95 அடி), அகலம் 19 மீ. (62 அடி). அதோடு, தூண்கள் நிறைந்த முற்றங்களும், அவற்றைச் சுற்றிலும் பல அறைகளும் இருந்தன. குளிர்சாதனங்கள் அல்லது வெப்பசாதனங்கள் கொண்ட பெரிய குளியல் அறையும் இருந்தது. படிகளைப் போன்ற அடுக்குகளைக் கொண்ட ஒரு தோட்டம் அந்த மாளிகையோடு இணைந்திருந்தது. யோவான் ஸ்நானகர் தன் ஊழியத்தை ஆரம்பிப்பதற்குச் சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கலகத்தில், அந்த மாளிகை தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், ஏரோதுவின் மகன் அர்கெலாயு அதை மறுபடியும் கட்டினான்.
பைபிள் காலங்களில், நாணலையோ மூங்கிலையோ வைத்து புல்லாங்குழல் செய்யப்பட்டது; எலும்பையோ தந்தத்தையோ வைத்துக்கூட அது செய்யப்பட்டது. இசைக்கருவிகளிலேயே புல்லாங்குழல்தான் மிகவும் பிரபலமாக இருந்தது. சந்தோஷமான சமயங்களில், உதாரணத்துக்கு விருந்துகளின்போதும் திருமண நிகழ்ச்சிகளின்போதும் புல்லாங்குழல் வாசிக்கப்பட்டது. (1ரா 1:40; ஏசா 5:12; 30:29) அதைப் பார்த்துதான் பிள்ளைகள் பொது இடங்களில் புல்லாங்குழல் ஊதி விளையாடினார்கள். சோகமான சமயங்களிலும் புல்லாங்குழல் வாசிக்கப்பட்டது. பொதுவாக, ஒப்பாரி வைக்கப்பட்டபோது சிலர் புல்லாங்குழலில் சோகமான ராகங்களை வாசித்தார்கள். இங்கே உள்படத்தில் காட்டப்பட்டிருப்பது புல்லாங்குழலின் ஒரு துண்டு; அது எருசலேமில் ஒரு கற்குவியலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டது. எருசலேம் ஆலயத்தை ரோமர்கள் அழித்த காலப்பகுதியில் அது பயன்படுத்தப்பட்டது. அதன் நீளம் கிட்டத்தட்ட 15 செ.மீ. (6 அங்.) ஒரு பசுவின் முன்னங்கால் எலும்பு ஒன்றிலிருந்து அது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இங்கே காட்டப்பட்டிருப்பதைப் போன்ற சில சந்தைகள் சாலையோரமாக அமைந்திருந்தன. வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பொருள்களைத் தெருவில் குவித்து வைத்ததால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளால் வீட்டு உபயோகப் பொருள்களையும், மண்பாண்டங்களையும், விலை உயர்ந்த கண்ணாடிப் பொருள்களையும் அங்கே வாங்க முடிந்தது. காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருள்களும் அங்கே கிடைத்தன. அந்தக் காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாததால், தேவையான பொருள்களை வாங்க மக்கள் தினமும் சந்தைக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே பொதுவாக, மற்ற ஊர் வியாபாரிகள் மூலமோ மற்ற ஊர் மக்கள் மூலமோ கடைக்காரர்கள் சில செய்திகளைத் தெரிந்துகொள்வார்கள்... பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... வேலை இல்லாதவர்கள் கூலி வேலைக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற சந்தையில் இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார், அங்கே பவுலும் ஊழியம் செய்திருக்கிறார். (அப் 17:17) ஆனால், பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும், இந்தப் பொது இடங்களில் மக்கள் தங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள்.
இந்த வீடியோவில் காட்டப்படும் பரந்துவிரிந்த காட்சி, கலிலேயா கடலின் வடகிழக்குக் கரைக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் ஓஃபிர் கோபுரத்திலிருந்து (Ofir Lookout) எடுக்கப்பட்டது. அன்றைய கப்பர்நகூம் (1) அமைந்திருந்ததாகச் சொல்லப்படும் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 3 கி.மீ. (2 மைல்) தூரத்தில்தான் கோராசின் (2) இருந்தது. இரண்டு வருஷங்களுக்கும் மேலாக இயேசு கலிலேயாவில் பெரிய அளவில் ஊழியம் செய்தபோது பெரும்பாலும் கப்பர்நகூமில் தங்கியதாகத் தெரிகிறது. அப்போஸ்தலர்களான பேதுருவும் அந்திரேயாவும் கப்பர்நகூமில் குடியிருந்தார்கள். மத்தேயு வேலை பார்த்த வரி வசூலிக்கும் அலுவலகம் கப்பர்நகூமில் அல்லது அதற்குப் பக்கத்தில் இருந்தது. (மாற் 1:21, 29; 2:1, 13, 14; 3:16; லூ 4:31, 38) பேதுருவும் அந்திரேயாவும் பிலிப்புவும், கப்பர்நகூமுக்குப் பக்கத்தில் இருந்த பெத்சாயிதா (3) நகரத்தைச் சேர்ந்தவர்கள். (யோவா 1:44) இந்த மூன்று நகரங்களிலும் அவற்றுக்குப் பக்கத்திலும் இயேசு நிறைய அற்புதங்களைச் செய்தார்.—இணைப்பு A7-D, வரைபடம் 3B மற்றும் A7-E, வரைபடம் 4 ஆகியவற்றைப் பாருங்கள்.
இரண்டு வருஷங்களாக இயேசு கலிலேயாவில் பெரிய அளவில் ஊழியம் செய்தபோது பெரும்பாலும் கப்பர்நகூமில் தங்கியதாகத் தெரிகிறது; கப்பர்நகூமுக்குப் பக்கத்தில்தான் கோராசினும் பெத்சாயிதாவும் இருந்தன. கோராசின் மற்றும் பெத்சாயிதாவில் குடியிருந்த யூதர்கள் இயேசுவின் அற்புதங்களைக் கண்கூடாகப் பார்த்தார்கள். (தீருவிலும் சீதோனிலும் உருவ வழிபாடு செய்துவந்த மக்கள் அந்த அற்புதங்களைப் பார்த்திருந்தால் அவர்களே மனம் திருந்தியிருப்பார்கள்.) உதாரணத்துக்கு, பெத்சாயிதாவில்தான் 5,000-க்கும் அதிகமான மக்களுக்கு இயேசு அற்புதமாக உணவு தந்தார்; பார்வையில்லாத ஒருவரையும்கூட அங்குதான் குணப்படுத்தினார்.—மத் 14:13-21; மாற் 8:22; லூ 9:10-17.
ஒரு வகையான நுகத்தடி, இரண்டு பக்கங்களிலும் சுமைகள் தொங்கவிடப்பட்ட ஒரு மரத்தடியாக அல்லது மரச்சட்டமாக இருந்தது; அது ஒரு நபரின் தோள்களில் வைக்கப்பட்டது. இன்னொரு வகையான நுகத்தடி, ஏதோவொன்றை இழுப்பதற்காக இரண்டு விலங்குகளின் கழுத்தில் வைக்கப்பட்ட மரத்தடியாக அல்லது மரச்சட்டமாக இருந்தது.