மத்தேயு எழுதியது 9:1-38

9  அதனால் அவர் படகில் ஏறி, கடலைக் கடந்து தன்னுடைய சொந்த ஊருக்குப் போனார்.+  அப்போது சிலர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனைப் படுக்கையோடு அவரிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “மகனே, தைரியமாயிரு; உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”+ என்று சொன்னார்.  அங்கே இருந்த வேத அறிஞர்கள் சிலர், “இவன் தெய்வ நிந்தனை செய்கிறான்”+ என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டார்கள்.  இயேசு அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்துகொண்டு, “உங்கள் இதயத்தில் ஏன் பொல்லாத காரியங்களை யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?+  ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று சொல்வது சுலபமா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வது சுலபமா?+  ஆனாலும், பூமியில் பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் மனிதகுமாரனுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக—” என்று சொல்லிவிட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ”+ என்று சொன்னார்.  அவனும் எழுந்து தன்னுடைய வீட்டுக்குப் போனான்.  இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் பயந்துபோனார்கள்; இப்படிப்பட்ட அதிகாரத்தை மனிதர்களுக்குக் கொடுத்த கடவுளை அவர்கள் மகிமைப்படுத்தினார்கள்.  அதன் பின்பு, இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருந்தபோது வரி வசூலிக்கும் அலுவலகத்தில் மத்தேயு என்ற ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னார்; உடனே மத்தேயு எழுந்து அவரைப் பின்பற்றிப் போனார்.+ 10  பின்பு, அவருடைய வீட்டில் இயேசு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது* வரி வசூலிப்பவர்கள் பலரும், பாவிகள் பலரும் அங்கே வந்து அவரோடும் அவருடைய சீஷர்களோடும் சேர்ந்து சாப்பிட* ஆரம்பித்தார்கள்.+ 11  இதைப் பார்த்த பரிசேயர்கள் அவருடைய சீஷர்களிடம், “உங்கள் போதகர் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறார்?”+ என்று கேட்டார்கள். 12  அது அவருடைய காதில் விழுந்தபோது, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை.+ 13  அதனால், ‘பலியை அல்ல, இரக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்’+ என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள். நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்” என்று சொன்னார். 14  பின்பு, யோவானுடைய சீஷர்கள் அவரிடம் வந்து, “நாங்களும் பரிசேயர்களும் தவறாமல் விரதம் இருக்கிறோம்; ஆனால், உங்களுடைய சீஷர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை?”+ என்று கேட்டார்கள். 15  அதற்கு இயேசு, “மணமகன்+ தங்களோடு இருக்கும்வரை அவருடைய நண்பர்கள்+ துக்கப்பட வேண்டிய அவசியம் இல்லைதானே? ஆனால், மணமகன் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் வரும்,+ அப்போது அவர்கள் துக்கப்பட்டு விரதம் இருப்பார்கள். 16  புதிய துணியைப் பழைய உடையில் வைத்து யாருமே ஒட்டுப்போட மாட்டார்கள். ஏனென்றால், புதிய துணி சுருங்கும்போது, பழைய உடையின் கிழிசல் இன்னும் பெரிதாகிவிடும்.+ 17  அதேபோல், பழைய தோல் பைகளில் யாருமே புதிய திராட்சமதுவை ஊற்றி வைக்க மாட்டார்கள்; அப்படி ஊற்றி வைத்தால், அந்தப் பைகள் வெடித்துவிடும்; அப்போது திராட்சமதுவும் கொட்டிவிடும், பைகளும் நாசமாகிவிடும். அதனால்தான், புதிய திராட்சமதுவைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைப்பார்கள்; அப்போது இரண்டுமே வீணாகாமல் இருக்கும்” என்று சொன்னார். 18  அவர் இந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஒரு தலைவர் அவர் முன்னால் வந்து மண்டிபோட்டு, “இந்நேரத்துக்குள் என் மகள் செத்துப்போயிருப்பாள்; ஆனால், நீங்கள் வந்து அவள்மேல் உங்கள் கையை வைத்தால், அவளுக்கு மறுபடியும் உயிர் வந்துவிடும்”+ என்று சொன்னார். 19  அதனால், இயேசு எழுந்து அவர் பின்னால் போனார்; அவருடைய சீஷர்களும் கூடவே போனார்கள். 20  அப்போது, 12 வருஷங்களாக இரத்தப்போக்கினால்+ அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண், 21  “அவருடைய மேலங்கியைத் தொட்டாலே நான் குணமாகிவிடுவேன்”*+ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, அவருக்குப் பின்னால் போய் அவருடைய மேலங்கியின் ஓரத்தை* தொட்டாள்.+ 22  இயேசு அவளைத் திரும்பிப் பார்த்து, “மகளே, தைரியமாயிரு! உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது”*+ என்று சொன்னார். அந்த நொடியே அந்தப் பெண் குணமானாள்.+ 23  பின்பு, அந்தத் தலைவருடைய வீட்டுக்கு இயேசு வந்தார்; அங்கே குழல் ஊதுகிறவர்களையும் சத்தமாக அழுதுகொண்டிருந்த கூட்டத்தாரையும் பார்த்து,+ 24  “இங்கிருந்து போய்விடுங்கள்; சிறுமி சாகவில்லை, அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்”+ என்று சொன்னார். அவர்களோ அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தார்கள். 25  கூட்டத்தாரை வெளியே அனுப்பியவுடன், அவர் உள்ளே போய் அந்தச் சிறுமியின் கையைப் பிடித்தார்,+ அப்போது அவள் எழுந்துகொண்டாள்.+ 26  இதைப் பற்றிய பேச்சு அந்தப் பகுதியெங்கும் பரவியது. 27  இயேசு அங்கிருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தபோது, கண் தெரியாத இரண்டு பேர்,+ “தாவீதின் மகனே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்” என்று கத்திக்கொண்டே அவர் பின்னால் போனார்கள். 28  அவர் வீட்டுக்குள் போன பின்பு, கண் தெரியாத அந்த ஆட்கள் அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களிடம், “என்னால் உங்களுக்குப் பார்வை கொடுக்க முடியுமென்று நம்புகிறீர்களா?”+ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆமாம், எஜமானே” என்று சொன்னார்கள். 29  அப்போது அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு நடக்கட்டும்” என்று சொன்னார். 30  உடனே அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.+ இயேசு அவர்களிடம், “இந்த விஷயம் யாருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்”+ என்று கண்டிப்புடன் சொன்னார். 31  ஆனால் அவர்கள் வெளியே போய், அந்தப் பகுதியிலிருந்த எல்லாருக்கும் அவரைப் பற்றிச் சொன்னார்கள். 32  அவர்கள் புறப்பட்டுப் போனபோது, பேய் பிடித்து ஊமையாகிவிட்ட ஒரு மனிதனை மக்கள் அவரிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.+ 33  அவர் அந்தப் பேயை விரட்டியதும் அவன் பேச ஆரம்பித்தான்.+ மக்கள் எல்லாரும் அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு, “இந்த மாதிரி ஒன்றை இஸ்ரவேலில் நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை”+ என்று சொன்னார்கள். 34  ஆனால் பரிசேயர்கள், “பேய்களுடைய தலைவனின் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொன்னார்கள். 35  இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார், எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார்.+ 36  மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது;+ ஏனென்றால், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும்* புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்.+ 37  அவர் தன்னுடைய சீஷர்களிடம், “அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள்.+ 38  அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானிடம் கெஞ்சிக் கேளுங்கள்”+ என்று சொன்னார்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

தன்னுடைய சொந்த ஊருக்கு: அதாவது, “கப்பர்நகூமுக்கு.” கலிலேயா பகுதியில் இயேசு இந்த ஊரில்தான் குடியிருந்தார். (மத் 4:13; மாற் 2:1) இந்த ஊருக்குப் பக்கத்தில்தான் அவர் வளர்ந்த நாசரேத் ஊரும், தண்ணீரை அவர் திராட்சமதுவாக மாற்றிய கானா ஊரும், ஒரு விதவையின் மகனை அவர் உயிரோடு எழுப்பிய நாயீன் ஊரும், பெத்சாயிதா ஊரும் இருந்தன. பெத்சாயிதாவுக்குப் பக்கத்தில்தான் கிட்டத்தட்ட 5,000 ஆண்களுக்கு அவர் உணவு கொடுத்திருந்தார், பார்வையில்லாத ஒருவனையும் குணப்படுத்தியிருந்தார்.

அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து: ‘அவர்கள்’ என்ற பன்மை சுட்டுப்பெயரை இயேசு பயன்படுத்தியது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமல்லாமல் அங்கிருந்த கூட்டத்தார் எல்லாருக்குமே நிறைய விசுவாசம் இருந்ததை இயேசு கவனித்தார் என்பதைக் காட்டியது.

மகனே: வே.வா., “பிள்ளையே.” பாசத்தைக் காட்டுவதற்காக இயேசு பயன்படுத்திய வார்த்தை.—2தீ 1:2; தீத் 1:1; பிலே 10.

என்று சொல்வது சுலபமா: பாவங்களை மன்னிப்பதாகச் சொல்வது சுலபம்; ஏனென்றால், அதை நிரூபிப்பதற்கு எந்தக் கண்கூடான அத்தாட்சியும் தேவைப்படாது. ஆனால், எழுந்து நட என்று சொல்லும்போது, ஒரு அற்புதத்தைச் செய்ய வேண்டும். அப்போதுதான், பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரம் இயேசுவுக்கு இருப்பது எல்லாருக்கும் தெளிவாகத் தெரியவரும். இந்தப் பதிவும் ஏசா 33:24-வது வசனமும், நோயை நம்முடைய பாவ இயல்போடு சம்பந்தப்படுத்திப் பேசுகின்றன.

மனிதகுமாரனுக்கு: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

நீங்கள் தெரிந்துகொள்வதற்காக—: வாக்கியம் முடியாததை இந்தக் கோடு காட்டுகிறது; பேசுவதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, எல்லாருக்கும் முன்பாக அந்த நோயாளியைக் குணப்படுத்துவதன் மூலம் இயேசு தன்னுடைய குறிப்பை வலிமையான விதத்தில் நிரூபித்தார்.

வரி வசூலிக்கும் அலுவலகத்தில்: வே.வா., “வரி வசூலிக்கும் சாவடியில்.” இது ஒரு சின்னக் கட்டிடமாக அல்லது சாவடியாக இருந்திருக்கலாம். வரி வசூலிப்பவர் அங்கே உட்கார்ந்து, ஏற்றுமதிப் பொருள்களுக்கும், இறக்குமதிப் பொருள்களுக்கும், தேசமெங்கும் வணிகர்கள் எடுத்துச் சென்ற சரக்குகளுக்கும் வரி வசூலித்தார். மத்தேயுவின் அலுவலகம் கப்பர்நகூமில் அல்லது அதற்குப் பக்கத்தில் இருந்தது.

மத்தேயு: மத்தேயு தலைப்பு மற்றும் 10:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

என்னைப் பின்பற்றி வா: மாற் 2:14-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மத்தேயு: “மத்தேயு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்கப் பெயர், “மத்தித்தியா” (1நா 15:18) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெயப் பெயரின் சுருக்கமாக இருக்கலாம். “மத்தித்தியா” என்ற பெயரின் அர்த்தம், “யெகோவாவின் பரிசு.”

சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது: மாற் 2:15-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

வரி வசூலிப்பவர்கள்: மத் 5:46-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

பாவிகள்: எல்லா மனிதர்களுமே பாவிகள் என்று பைபிள் சொல்கிறது. (ரோ 3:23; 5:12) ஆனால், இங்கே இந்த வார்த்தை குறிப்பாக சிலரை அர்த்தப்படுத்தியது; அநேகமாக, பாவம் செய்வதில் ஊறிப்போயிருந்தவர்களை, ஒருவேளை ஒழுக்கக்கேடான அல்லது சட்டவிரோதமான செயலில் பழக்கமாக ஈடுபட்டவர்களை இது அர்த்தப்படுத்தியிருக்கலாம். (லூ 7:37-39; 19:7, 8) திருச்சட்டத்தைப் பற்றித் தெரியாத அல்லது ரபீக்களின் பாரம்பரியங்களைப் பின்பற்றாத யூத மக்களுக்கும் மற்ற மக்களுக்கும்கூட யூத மதத் தலைவர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.

பலியை அல்ல, இரக்கத்தைத்தான்: ஓசி 6:6-ல் உள்ள இந்த வார்த்தைகளை இயேசு இரண்டு தடவை (இங்கும் மத் 12:7-லிலும்) மேற்கோள் காட்டினார். சுவிசேஷ எழுத்தாளர்களில் மத்தேயு மட்டும்தான் இந்த மேற்கோளையும், இரக்கம் காட்டாத அடிமையைப் பற்றிய உவமையையும் பதிவு செய்திருக்கிறார்; இவர் மக்களால் இழிவாகக் கருதப்பட்ட வரி வசூலிப்பவர், பிற்பாடு இயேசுவின் நெருங்கிய நண்பராக ஆனவர். (மத் 18:21-25) பலி மட்டுமல்ல, இரக்கமும் அவசியம் என்று இயேசு திரும்பத் திரும்ப வலியுறுத்தியதை மத்தேயுவின் சுவிசேஷம் சிறப்பித்துக் காட்டுகிறது.

விரதம் இருக்கிறோம்: மத் 6:16-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அவருடைய நண்பர்கள்: அதாவது, “மணமகனின் நண்பர்கள்.” நே.மொ., “மணமகன் அறையின் மகன்கள்.” திருமண விருந்தாளிகளை, முக்கியமாக மணமகனின் நண்பர்களை, குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மரபுத்தொடர்.

தோல் பைகளில் . . . திராட்சமதுவை: பைபிள் காலங்களில் மக்கள் பொதுவாகத் தோல் பைகளில் திராட்சமதுவை ஊற்றி வைத்தார்கள். (1சா 16:20) தோல் பைகள் வெள்ளாடு, செம்மறியாடு போன்ற வீட்டு விலங்குகளின் முழு தோலால் செய்யப்பட்டன. பழைய தோல் பைகள் கடினமாகவும் விறைப்பாகவும் இருந்தன. ஆனால் புதிய தோல் பைகளுக்கு நீளும் தன்மையும் விரிவடையும் தன்மையும் இருந்தன. அதனால், புதிய திராட்சமது புளிக்க புளிக்க எவ்வளவுதான் அழுத்தம் அதிகமானாலும் அந்தப் பைகளால் தாக்குப்பிடிக்க முடிந்தது.—சொல் பட்டியலில் “தோல் பை” என்ற தலைப்பைப் பாருங்கள்.

ஒரு தலைவர்: இந்த ‘தலைவரின்’ (கிரேக்கில், ஆர்க்கோன்) பெயர் யவீரு என்று இதன் இணைவசனங்களில் மாற்குவும் லூக்காவும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர் ஜெபக்கூடத் தலைவர்களில் ஒருவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.—மாற் 5:22; லூ 8:41.

அவர் முன்னால் வந்து மண்டிபோட்டு: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவருக்கு மரியாதை செலுத்தி.”—மத் 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

இரத்தப்போக்கினால்: அநேகமாக, மாதவிலக்கினால் ஏற்பட்ட தீராத இரத்தப்போக்கைக் குறித்தது. திருச்சட்டத்தின்படி, இப்படிப்பட்ட இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தீட்டுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.—லேவி 15:19-27.

மகளே: இயேசு ஒரு பெண்ணை “மகளே” என்று அழைத்ததாக வேறு எந்தப் பதிவிலும் இல்லை. அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான ஒரு சூழ்நிலையில் இருந்ததாலும், பயத்தில் ‘நடுங்கிக்கொண்டு’ இருந்ததாலும் அவர் அவளை அப்படி அழைத்திருக்கலாம். (லூ 8:47) அவளை அப்படிப் பாசத்தோடு அழைத்ததன் மூலம், அவள்மேல் மிகுந்த கரிசனை இருந்ததை இயேசு காட்டினார். ‘மகள்’ என்ற வார்த்தை அந்தப் பெண்ணின் வயதைப் பற்றி எதையும் சுட்டிக்காட்டுவதில்லை.

தாவீதின் மகனே: அந்த ஆட்கள் இயேசுவை இப்படி அழைத்ததன் மூலம், அவர்தான் தாவீதின் சிம்மாசனத்துக்கு வாரிசாக இருக்கும் மேசியா என்று நம்பியதைக் காட்டினார்கள்.—மத் 1:1, 6-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

கற்பித்தார் . . . பிரசங்கித்தார்: மத் 4:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

நல்ல செய்தியை: மத் 4:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அவருடைய மனம் உருகியது: இதற்கான கிரேக்க வினைச்சொல், ஸ்ப்ளாக்னீசோமே. இது “குடல்கள்” (ஸ்ப்ளாக்னா) என்ற வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. உடலுக்குள்ளிருந்து, அதுவும் அடிஆழத்திலிருந்து, பெருக்கெடுக்கும் உணர்ச்சியைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில், கரிசனையைக் குறிக்கும் வார்த்தைகளிலேயே இதுதான் மிகவும் வலிமையான வார்த்தை.

கொடுமைப்படுத்தப்பட்டும்: இதற்கான கிரேக்க வார்த்தை, “தோலுரிக்கப்பட்ட” என்ற அர்த்தத்தில் முதலில் பயன்படுத்தப்பட்டது. காட்டு விலங்குகளால் பீறிப்போடப்பட்ட ஆட்டை அல்லது முட்செடிகளுக்கு இடையிலும் கூர்மையான பாறைகளுக்கு இடையிலும் சுற்றித்திரிந்ததால் தோல் கிழிந்துபோன ஆட்டை அது படம்பிடித்துக் காட்டியது. பிற்பாடு இந்த வார்த்தை, “மோசமாக நடத்தப்பட்ட, கொடூரமாக நடத்தப்பட்ட, காயப்படுத்தப்பட்ட” என்ற அடையாள அர்த்தங்களிலும் பயன்படுத்தப்பட்டது.

புறக்கணிக்கப்பட்டும்: வே.வா., “சிதறப்பட்டும்.” இதற்கான கிரேக்க வார்த்தை, சோர்ந்துபோய் எதுவும் செய்ய முடியாத நிலைமையில் கேட்பாரற்று கிடக்கும் ஆட்டைப் படம்பிடித்துக் காட்டுகிறது. விரக்தி அடைந்த, உதாசீனம் செய்யப்பட்ட, ஆதரவற்ற மக்களை இது குறிக்கிறது.

மீடியா

கலிலேயா கடலின் வடக்குக் கரை, வடமேற்குக் காட்சி
கலிலேயா கடலின் வடக்குக் கரை, வடமேற்குக் காட்சி

1. கெனேசரேத் சமவெளி. இது முக்கோண வடிவில் இருந்த செழிப்பான நிலப்பகுதி. சுமார் 5 கி.மீ. (3 மைல்) நீளத்திலும் 2.5 கி.மீ. (1.5 மைல்) அகலத்திலும் இருந்தது. இந்தப் பகுதியின் கடலோரத்தில்தான் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகிய மீனவர்களைத் தன்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய இயேசு அழைத்தார்.—மத் 4:18-22.

2. இயேசு இங்குதான் மலைப்பிரசங்கத்தைக் கொடுத்தார் என்று பாரம்பரியம் சொல்கிறது.—மத் 5:1; லூ 6:17, 20.

3. கப்பர்நகூம். இந்த நகரத்தில்தான் இயேசு குடியிருந்தார். இந்த நகரத்திலோ இதற்குப் பக்கத்திலோதான் அவர் மத்தேயுவைச் சந்தித்தார்.—மத் 4:13; 9:1, 9.

திராட்சமது சேமித்து வைக்கப்பட்ட தோல் பைகள்
திராட்சமது சேமித்து வைக்கப்பட்ட தோல் பைகள்

தோல் பைகள் பொதுவாக செம்மறியாடுகள், வெள்ளாடுகள், அல்லது மாடுகளின் முழு தோலால் செய்யப்பட்டன. செத்துப்போன விலங்கின் தலையும் பாதங்களும் வெட்டப்பட்டன. அதன் வயிற்றுப் பகுதி கிழிக்கப்படாமல் இருப்பதற்காக, உள்ளே இருந்த பாகங்களெல்லாம் கவனமாக வெளியே எடுக்கப்பட்டன. தோலைப் பதப்படுத்திய பிறகு, திறந்த பகுதிகளெல்லாம் தைக்கப்பட்டன. அந்த விலங்கின் கழுத்து அல்லது கால் பகுதி மட்டும் தைக்கப்படாமல் விடப்பட்டது. அதுதான் அந்தப் பையின் வாய்ப்பகுதியாக இருந்தது. அது ஒரு அடைப்பானைக் கொண்டு மூடப்பட்டது அல்லது மெலிதான கயிற்றினால் கட்டப்பட்டது. தோல் பைகளில் திராட்சமது மட்டுமல்லாமல் பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, எண்ணெய், அல்லது தண்ணீர்கூட நிரப்பி வைக்கப்பட்டது.

முதல் நூற்றாண்டு ஜெபக்கூடம்
முதல் நூற்றாண்டு ஜெபக்கூடம்

கலிலேயா கடலின் வடகிழக்கே சுமார் 10 கி.மீ. (6 மைல்) தூரத்தில் இருக்கும் காம்லா என்ற இடத்தில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜெபக்கூடம் இருக்கிறது. அதில் காணப்படும் சில அம்சங்களை இந்தப் படம் சித்தரிக்கிறது. இது, பழங்காலத்தில் ஒரு ஜெபக்கூடம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்ய உதவுகிறது.